பட்டுக்கோட்டை நகராட்சி மீன் அங்காடி மீண்டும் செயல்பாட்டிற்கு வருமா?
பட்டுக்கோட்டை நகராட்சி மீன் அங்காடி மீண்டும் செயல்பாட்டிற்கு வருமா?
பட்டுக்கோட்டை நகராட்சி மீன் அங்காடி மீண்டும் செயல்பாட்டிற்கு வருமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மீன் அங்காடி
பட்டுக்கோட்டை-தஞ்சை சாலை ஆனைவிழுந்தான் குளத்தெரு சந்திப்பில் தமிழ்நாடு அரசு மீன் வளத்துறை சார்பில் பட்டுக்கோட்டை நகராட்சி மீன் அங்காடி பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. மீனவர் நலனுக்காக அமைக்கப்பட்ட இந்த அங்காடியில் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவ பெண்கள் கடற்கரையில் இருந்து மீன்களை வாங்கி வேன்களிலும், இருசக்கர வாகனங்களிலும் இந்த அங்காடிக்கு கொண்டு வந்து விற்று வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மீன் அங்காடி இயங்கவில்லை. மீன் விற்பதற்காக கடப்பை கல் பலகை மேடையும் அமைக்கப்பட்டிருந்தது.
செயல்பாட்டிற்கு வருமா?
தற்போது அந்த கடப்பை கல் பலகைகளும், மீன் விற்பனைக்குரிய தளவாடங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. மேலும் அங்காடிக்குள் நுழைய முடியாதபடி அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இதனால் மீன் விற்பனை செய்யும் பெண்களும் இந்த அங்காடிக்கு வருவதை நிறுத்தி பட்டுக்கோட்டை நகரில் தெருவோரங்களில் ஆங்காங்கே கிடைக்கும் இடங்களில் வெயிலிலும், மழையிலும் மீன் விற்பனை செய்து வருகிறார்கள். எனவே மீன்வளத்துறையும், நகராட்சியும் இணைந்து செயல்படாமல் உள்ள இந்த மீன் அங்காடியை சீரமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்து பெண்கள் வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.