அரசுத்துறையில் ஓராண்டில் 1,754 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுமா? தமிழக அரசு விளக்கம்


அரசுத்துறையில் ஓராண்டில் 1,754 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுமா? தமிழக அரசு விளக்கம்
x

அரசுத்துறையில் ஓராண்டில் 1,754 பணியிடங்கள் மட்டும் தான் நிரப்பப்பட உள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஓராண்டில் 10 போட்டித் தேர்வுகள் மூலம் ஆயிரத்து 754 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அதற்கான அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

அரசு வேலைக்காக காத்திருப்போர் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சமூகவலைதளங்களிலும் இதுதொடர்பாக பல்வேறு பதிவுகள் வெளியாகின.

தமிழக அரசு விளக்கம்

இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழக அரசு அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2023-ம் ஆண்டுக்கான போட்டித் தேர்வுகளின் அட்டவணை வெளியிட்டுள்ளதன் அடிப்படையில் ஓராண்டில் 10 தேர்வுகள் மூலம் 1,754 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளன என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த தகவல் முழுமையாக இல்லாததால் தவறான புரிதலுக்கு வழிவகுக்கும் என்பதால் அவற்றை மறுத்து பின்வரும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் இருந்து நேரடி நியமனத்திற்காக பெறப்படுகின்ற காலிப் பணியிடங்களுக்கான மதிப்பீடுகளின் அடிப்படையில், போட்டித் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டு வருகிறது.

இதர தேர்வு முகமை மூலம் ஆட்சேர்ப்பு

ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த அட்டவணை முதற்கட்டமாக தகவல்களை அளிக்கும் அட்டவணையாகும். இது தொடர்ந்து கூடுதல் பணியிடங்களுக்கான கேட்புகள் பெறப்பட்டு அட்டவணையில் சேர்த்து வெளியிடப்படும்.

இது மட்டுமன்றி, அரசுப் பணியிடங்களுக்கான மற்ற தேர்வு முகமைகளான ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மற்றும் வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் ஆகியவற்றின் வாயிலாகவும் அரசுப் பணியிடங்களுக்கான தேர்வுகள் ஆண்டு தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாரியங்கள் தவிர, அரசு வேலை வாய்ப்பகங்கள் வாயிலாகவும் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யப்பட்டும் பல்வேறு அரசுப் பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன.

தனியார் வேலைவாய்ப்பு

இவை தவிர, பணிக்காலத்தில் அகால மரணமடையும் அரசுப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையிலான பணிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலமாக கடந்த 1½ ஆண்டில் மொத்தம் ஆயிரத்து 63 முகாம்கள் நடத்தப்பட்டு 1 லட்சத்து 12 ஆயிரத்து 551 பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

அரசின் அனைத்துத் துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீடு செய்து, அவற்றை முறையாக நிரப்புவதே அரசின் கொள்கையாகும். அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களையும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யும் நடைமுறையும் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முறையாக நிரப்ப நடவடிக்கை

அரசு பணியிடங்களுக்கான தேர்வு முகமைகளின் மூலம் நடத்தப்படும் சில போட்டித் தேர்வுகளின் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு வருவதும், அப்பணியிடங்களை நிரப்புவதில் ஏற்படும் காலதாமதத்திற்கு ஒரு காரணமாகும்.

அவ்வாறு வழக்குகள் தொடரப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ள உரிய விதிகளும் இந்த அரசால் பரிசீலனை செய்யப்பட்டு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

அரசுத் துறைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களை முறையாக நிரப்புவதற்கான தொடர் நடவடிக்கையை இந்த அரசு கட்டாயம் மேற்கொள்ளும் என தெளிவுபடுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story