புதிய மின்மாற்றிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா?


புதிய மின்மாற்றிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா?
x

புதிய மின்மாற்றிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா?

நாகப்பட்டினம்

சிக்கல் ஊராட்சியில் பணிகள் முடிந்து 2 ஆண்டுகளாக காட்சி பொருளாக உள்ள புதிய மின்மாற்றிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறைந்த மின் அழுத்தம்

நாகை மாவட்டம் சிக்கல் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோவில் உள்ளது. சிக்கல், பொன்வெளி, பனைமேடு உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த பகுதியில் மின்சாரம் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

காட்சி பொருளாக மின்மாற்றிகள்

இதனை ஏற்று சிக்கல் மெயின் ரோடு, தெற்கு வீதி ஆகிய 2 இடங்களில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் இந்த புதிய மின்மாற்றிகள் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் காட்சி ெபாருளாக உள்ளது.

இதனால் அந்த பகுதி மக்கள் சீரான மின்சாரம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டு்ம்

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மின்வாரிய உயர் அதிகாரிகள்- அரசு உயர் அதிகாரிகளுக்கு 2 புதிய மின் மாற்றிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது கோடைகாலம் என்பதால் 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றிகள் பயன்பாட்டிற்கு வராமல் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் இரவில் தூங்க முடிவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சிக்கல் ஊராட்சியில் 2 ஆண்டுகளாக காட்சி பொருளாக உள்ள 2 புதிய மின்மாற்றிகளை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story