சேதம் அடைந்த சாக்கடை கால்வாய் பாலம் சீரமைக்கப்படுமா?


சேதம் அடைந்த சாக்கடை கால்வாய் பாலம் சீரமைக்கப்படுமா?
x

நாமக்கல் நகராட்சி 26-வது வார்டு தில்லைபுரத்தில் சேதம் அடைந்த சாக்கடை கால்வாய் பாலம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நாமக்கல்

26-வது வார்டு

நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இதில் 26-வது வார்டில் தில்லைபுரம், பிள்ளையார்கோவில் தெரு, காமராஜ் நகர், கருப்பண்ணார்கோவில் தெரு, பி.வி.ஆர்.தெரு, திருநகர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கி உள்ளன. இந்த வார்டில் ஒரே ஒரு ரேஷன்கடை மட்டுமே உள்ளது. எனவே அருகில் உள்ள வார்டுகளில் சென்று பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இதேபோல் இந்த வார்டில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உள்ளிட்டவை உள்ளன. இந்த வார்டு ஏற்கனவே உள்ள பழைய நகராட்சி பகுதியை சேர்ந்தது ஆகும். இங்கு பாதாள சாக்கடை திட்டம் அமலில் இருப்பதால், கழிவுநீர் பிரச்சினை இல்லை.

இந்த வார்டில் 1,060 ஆண்கள், 1,218 பெண்கள் என மொத்தம் 2,278 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சகுந்தலா வெற்றி பெற்றார். நகராட்சியின் பிற வார்டுகளை போல இந்த வார்டிலும் தெருநாய்கள் தொல்லை இருந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும். சாலை வசதியை மேம்படுத்த வேண்டும். அடிப்படை வசதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சேதமான சாலைகள்

இது குறித்து பி.வி.ஆர்.தெரு, பரணிநகர், திருநகர் நலச்சங்கத்தின் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

பி.வி.ஆர்.நகரின் மெயின்ரோடு மற்றும் குறுக்கு தெருக்களில் சாலை சேதமாகி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதை உடனடியாக சீரமைக்க வேண்டும். சாக்கடை கால்வாய்களில் சில இடங்களில் மண் நிரம்பி உள்ளது. இதனால் மழைநீர் சாலைகளில் தேங்கும் நிலை உள்ளது. எனவே மழைநீர் எளிதில் செல்லும் வகையில் சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.

நாமக்கல் நகரில் திருடர்கள் நடமாட்டம் இருப்பதால் எங்கள் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணித்தால் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இதேபோல் எங்கள் பகுதி பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க, மோகனூர் சாலையை தாண்டி காந்திநகர் பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே எங்கள் பகுதியிலேயே முழுநேர ரேஷன்கடை ஒன்றை திறக்க வேண்டும். இதேபோல் பி.வி.ஆர். தெருவில் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் நூலகம் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமையல் கூடம்

காமராஜ் நகரை சேர்ந்த பூவிழி:-

எங்கள் பகுதிக்கு சாலை வசதி மற்றும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும். காமராஜர் நகரில் உள்ள சமுதாய கூடத்திற்கு சமையல் கூடம் இல்லை. எனவே சமையல் கூடம் மற்றும் உணவு அருந்தும் இடம் கட்டி கொடுத்தால் விசேஷ நிகழ்ச்சிகளை நடத்த வசதியாக இருக்கும்.

வார்டு முழுவதும் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் பகுதிநேர ரேஷன்கடை அமைத்து கொடுத்தால், அத்தியாவசிய பொருட்களை எளிதில் வாங்கி கொள்ள முடியும்.

வேகத்தடை அமைக்க வேண்டும்

26-வது வார்டை சேர்ந்த சங்கர்:-

தில்லைபுரம் காமராஜ் நகரில் லேசான மழை பெய்தால் கூட தெருவில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கருப்பண்ணார் கோவில் அருகில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. எனவே வேகத்தடை அமைக்க வேண்டும்.

வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சேதமான சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். குறிப்பாக தில்லைபுரம் 3-வது சந்து பகுதியில் கழிவுநீர் செல்லும் சிறிய பாலம் சேதமான நிலையில் உள்ளது. அதை புதுப்பிக்க வேண்டும். இதேபோல் பழையநகராட்சி அருகில் உள்ள சந்து பகுதியிலும் கழிவுநீர் செல்வதற்கு ஏதுவாக சிறிய பாலம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

என்ன சொல்கிறார் கவுன்சிலர்:-

26-வது வார்டு கவுன்சிலர் சகுந்தலா கூறியதாவது:-

நான் அடிக்கடி வார்டு மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறேன். நான் பொறுப்பேற்ற பிறகு பரோடா வங்கி சந்து பகுதியில் பயனற்று கிடந்த ஆழ்துளை கிணற்றை புதுப்பித்து, புதிய குழாய் அமைத்து கொடுத்து உள்ளேன். ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உயர்மின் கோபுர விளக்கு அமைத்தும், மின்இணைப்பு கொடுக்காததால் கடந்த 10 மாதங்களுக்கு மேல் பயன் இன்றி கிடந்தது. எனது முயற்சியால் தற்போது மின்இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளாக தூர்வாராமல் இருந்த சாக்கடை கால்வாய்களை தூர்வாரி கொடுத்து உள்ளேன்.

திருநகர் பகுதியில் ஒரு வீதியில் குடிநீர் குழாயில் வேர் அடைப்பு இருந்ததால் பல மாதங்களாக அப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி அவதி அடைந்தனர். நான் பொறுப்பேற்ற பிறகு அதை சீரமைத்து கொடுத்து உள்ளேன். முதல்கட்டமாக பி.வி.ஆர்.தெரு மற்றும் திருநகர் பகுதிகளில் விரைவில் சாலை அமைக்கப்பட உள்ளது. அதன் பிறகு ஒவ்வொரு பகுதியாக சாலை புதுப்பிக்கப்படும். இதேபோல் தெருவிளக்கு இல்லாத பகுதிகளிலும் விரைவில் தெருவிளக்கு வசதி செய்து கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வார்டு மக்களுக்கு வேண்டியவை

1. கருப்பண்ணார் கோவில் அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

2. சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும்.

3. பி.வி.ஆர். தெருவில் ரேஷன்கடை அமைக்க வேண்டும்

4. சேதமான சிறுபாலங்களை புதுப்பிக்க வேண்டும்.

5. தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.


Next Story