ரீமாடலிங்' திட்டத்தில் விடுபட்ட 4 கி.மீட்டர் தூரம் மோகனூர் வாய்க்கால் சீரமைக்கப்படுமா?


ரீமாடலிங் திட்டத்தில் விடுபட்ட 4 கி.மீட்டர் தூரம்  மோகனூர் வாய்க்கால் சீரமைக்கப்படுமா?
x

மோகனூர் வாய்க்காலின் நுழைவு பகுதியில ‘ரீமாடலிங்’ திட்டத்தில் விடுபட்ட 4 கி.மீட்டர் தூரத்தை சீர்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நாமக்கல்

மோகனூர்

மோகனூர் வாய்க்கால்

நாமக்கல் மாவட்டம் அனிச்சம்பாளையம் காவிரி ஆற்று பகுதியில் இருந்து மோகனூர் வாய்க்கால் தொடங்குகிறது. இந்த வாய்க்கால் மூலம் மோகனூர், ஒருவந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்கின்றது.

இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் நெல், வாழை, வெற்றிலை, கரும்பு, கோரை போன்ற பல்வேறு பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜவாய்க்கால், கொமாரபாளையம் வாய்க்கால் மற்றும் மோகனூர் வாய்க்கால் ஆகியவை ரூ.184 கோடியில் 'ரீமாடலிங்' செய்யப்பட்டு, இருபுறங்களிலும் கான்கிரீட் சுவர் அமைத்து சீர்படுத்தப்பட்டது.

கடைமடை பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை

அப்போது நாமக்கல் மாவட்டம் அனிச்சம்பாளையத்திற்கும், கரூர் மாவட்டம் புகளூருக்கும் இடையில் கதவணை கட்ட திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனால் அந்த கதவணை எந்த பகுதியில் அமையும் என சரிவர தெரியாத நிலையில், மோகனூர் வாய்க்காலின் நுைழவு பகுதியான அனிச்சம் பாளையத்திலிருந்து பாலப்பட்டி வரை உள்ள சுமார் 4 கி.மீட்டர் தூரத்திற்கு இரு புறமும் வாய்க்கால் 'ரீமாடலிங்' திட்டத்தில் சீர்படுத்தப்படவில்லை.

தற்போது வாய்க்காலில் வரும் தண்ணீர் ஏதாவது ஒரு பகுதியில் உடைந்து காவிரி ஆற்றில் கலந்து விடுவதால், மோகனூர் வாய்க்காலின் கடைமடை பகுதியான ஒருவந்தூர், வடுகப்பட்டி பகுதிகளில் விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் செல்வதில்லை. அதனால் கடைமடை விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் பல்வேறு மனுக்கள் கொடுக்கப்பட்டது.

அப்போது கதவணை திட்டத்துடன் சேர்த்து இந்த 4 கி.மீட்டர் தூரம் உள்ள வாய்க்காலை சீர்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக கூறப்பட்டது. ஆனால் கதவணை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இதற்கு நிதி ஒதுக்காததால், தற்போது வரை அந்தப் பணி செய்யாமலே உள்ளது. ஆகவே இந்த ரீமாடலிங் திட்டத்தில் 4 கி.மீட்டர் தூர வாய்க்காலை சீர்படுத்த வேண்டும் என மோகனூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நிதி ஒதுக்கீடு

இது குறித்து மோகனூரை சேர்ந்த விவசாயி சேனாதிபதி கூறியதாவது:-

மோகனூர் வாய்க்காலின் நுைழவு பகுதியான அனிச்சம்பாளையத்தில் இருந்து காவிரி ஆற்றை ஒட்டியவாறு மோகனூர் வாய்க்கால் வருகின்றது. அதன் இரு புறங்களிலும் சீர்படுத்தாமல் உள்ளதால் பழைய சுவர்கள் இடிந்து கற்கள் விழுந்து விடுகின்றன. இதனால் தண்ணீர் தேங்கி ஓரப்பகுதிகளில் உடைந்து, மீண்டும் காவிரி ஆற்றிலே தண்ணீர் கலக்கும் நிலை உள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு பலமுறை விளக்கி கூறப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த காலத்தில் ரூ.25 கோடி நிதி ஒதுக்குவதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படாததால் தண்ணீர் அதிகம் வரும் காலங்களில் மண் அரிப்பு ஏற்படுகிறது.

கருவேல மரங்கள்

பேட்டப்பாளையம் விவசாயி குணசேகரன்:-

விடுபட்ட 4 கி.மீட்டர் தூர வாய்க்காலை சரி செய்ய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதன்மூலம் மோகனூர் வாய்க்காலின் இரு பகுதியிலும் தடுப்புச் சுவர் எழுப்பி, மண் கரைந்து வாய்க்காலில் விழாத வகையிலும், வாய்க்காலில் உள்ள தண்ணீர் உடைந்து ஆற்றுக்கு செல்லாத வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளை விரைவாக செயல்படுத்தி விவசாயத்தை வளர்க்க வழிவகை செய்ய வேண்டும். நுைழவு பகுதி சீராக இருந்தால் தான் வாய்க்காலில் வரும் தண்ணீர் கடைமடை வரை சென்று பாயும். அதே போல் காவிரி ஆற்றின் உள்பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களையும் அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story