பருத்திக்கு உரிய விலை கிடைக்குமா?
பருத்திக்கு உரிய விலை கிடைக்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
அதிகளவில் பயிரிடப்படும் பருத்தி
பெரம்பலூர் மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். மாவட்டத்தில் முக்கிய பயிராக பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்திலேயே பருத்தி அதிகளவில் பயிரிடப்படும் மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் திகழ்கிறது. பருத்திக்கு என்று வேப்பந்தட்டையில் ஆராய்ச்சி நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த நிலையத்தில்தான் தமிழகத்திலேயே முதன்முறையாக பருத்தியை அறுவடை செய்ய நவீன எந்திரம் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. ஆண்டுதோறும் மாவட்டத்தில் சராசரியாக பருத்தி 10 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் பருத்திக்கு சரியான விலை கிடைப்பதில்லை என்று விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. தற்போது பருத்தி அறுவடை பணி முடியும் தருவாயில் உள்ளது.
பருத்தி சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை விவசாயிகளால் செலவிடப்படுகிறது. பருத்திக்கு மருந்து அதிகம் அடிக்க வேண்டியிருக்கிறது. தற்போது பருத்தி களை எடுக்கும் பணியில் இருந்து அறுவடை வரை போதிய கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அவர்கள் சம்பளம் அதிகம் கேட்கிறார்கள். பருத்தி களை எடுக்கும் எந்திரங்களும் வாடகைக்கு உடனடியாக கிடைப்பதில்லை. பல்வேறு நோய் தாக்குதலில் இருந்து பருத்தியை காப்பாற்றி அறுவடைக்கு கொண்டு வருவதற்குள் விவசாயிகள் படாதபாடு படுகின்றனர்.
ஜவுளி ெதாழில்நுட்ப பூங்கா
பருத்திக்கு விவசாயிகள் இவ்வளவு செலவழித்தும் அதற்கான லாபம் கிடைப்பதில்லை. தற்போது பருத்தி ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.7 ஆயிரத்து 500 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. பருத்தியை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி செல்கின்றனர். மேலும் இடைத்தரகர்கள் எடை மோசடியில் ஈடுபடுகின்றனர். பருத்தியை குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்தால்தான் விவசாயிகள் நஷ்டப்படமாட்டார்கள். மாவட்டத்தில் பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு காந்தி நகரிலும், வேப்பந்தட்டை தாலுகா, பூலாம்பாடியிலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்திக்கு சரியான விலை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. விவசாயிகளில் சிலருக்கு அந்த ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் இருக்கிறது என்று கூட தெரிவதில்லை. அங்கு பருத்தியை ஏலத்திற்கு கொண்டு செல்ல போக்குவரத்து செலவு அதிகமாகிறது. பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர்-இரூர் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 100 ஏக்கர் நிலத்தில், பெரம்பலூர் மாவட்ட ஜவுளி தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது தற்போதுவரை வெறும் அறிவிப்பாகவே இருக்கிறது. ஜவுளி பூங்கா தொடங்கப்பட்டால் மாவட்டத்தில் உள்ள பருத்திக்கு தேவை அதிகமாகும் என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளது. இது பற்றிய விவசாயிகளின் கருத்துக்களை காண்போம்.
தரமான விதைகள்
குரும்பாபாளையத்தை சேர்ந்த விவசாயி பெரியசாமி:- மாவட்டத்தில் அதிகளவு சாகுபடி செய்யப்படும் பருத்தியை அறுவடையின்போது கொள்முதல் செய்ய அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். மேலும் கூடுதலாக நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும். மானிய விலையில் களை எடுக்கும் கருவிகள் விவசாயிகளுக்கு கிடைக்க வேளாண்மை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்பெல்லாம் நாட்டு பருத்தி சாகுபடி செய்யப்படும். தற்போது நாட்டு பருத்தி சாகுபடி வெகுவாக குறைந்துள்ளது. முன்பெல்லாம் பருத்தி அறுவடையின்போது பஞ்சு பஞ்சாக இருக்கும். தற்போது விதையாக இருக்கிறது. இதனால் செடியில் இருந்து பருத்தியை எடுப்பதற்கு தாமதம் ஆகிறது. பருத்தி விதை தரமானதாக இல்லை. தரமான விதைகள், நாட்டு பருத்தி விதைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கையில் பருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு நஷ்டம்
பாலையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சின்னசாமி:- வேப்பந்தட்டை தாலுகாவில் பெரும்பாலானோர் மானாவாரி நிலத்தில் பருத்தி மற்றும் மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக கடந்த ஆண்டு பருத்தி ஒரு கிலோ ரூ.120 வரை விற்பனை ஆனது. இதனால் விவசாயிகளுக்கு ஓரளவுக்கு லாபம் கிடைத்தது. ஆனால் கடந்த ஆண்டு பருத்தி அதிக விலைக்கு விற்றதால் அதிகப்படியான விவசாயிகள் இந்தாண்டு பருத்தி பயிரிட்டோம். ஆனால் இந்த ஆண்டு பருத்தி ஒரு கிலோ 75 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளோம். மேலும் பருத்தியில் ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செலவு அதிகரித்து வருகிறது. அதாவது கடந்த ஆண்டை விட கூலியாட்கள் செலவு, பூச்சி மருந்து செலவு, உரம் மற்றும் உழவு செலவு என அனைத்து வகைகளிலும் செலவு அதிகரித்து இருக்கிறது. ஆனால் பருத்தி விலை மிக குறைவாக விற்பதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளோம் இது மிகுந்த வேதனை அளிக்கிறது.
உரிய விலை கிடைக்க...
குன்னம் அருகே அணைப்பாடியை சேர்ந்த பெ.சுந்தர்ராஜ்:- நான் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரிட்டுள்ளேன். ஒரு ஏக்கருக்கு விதையில் தொடங்கி உழவு, உரம், மருந்து, ஆட்கள் கூலி என சுமார் ரூ.40 ஆயிரம் வரை செலவாகிறது. பருத்தி விதைகளை விதைத்த பிறகு, முன்பு 5 முதல் 10 சதவீதம் வரை மட்டுமே முளைப்பு திறன் இல்லாமல் இருக்கும். மீண்டும் முளைக்காத இடங்களில் திரும்ப விதைப்போம். ஆனால் இப்போதெல்லாம் 30 சதவீதம் வரை முளைப்புத்திறன் குறைவாக இருக்கிறது. தற்போது 70 சதவீதம் மட்டுமே முளைக்கிறது. இதனால் முந்தைய விதைப்பில் முளைக்கும் செடிகளுக்கும், பிந்தைய விதைப்பில் முளைக்கும் செடிகளுக்கும் வித்தியாசம் இருப்பதோடு கூடுதல் செலவும் ஆகிறது. மேலும் விதைகள் முறையாக பரிசோதனை செய்யப்படுவதில்லை. முன்பெல்லாம் சுமார் ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஆனால் தற்போது 700 கிலோ கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. பல செடிகளில் காயாக இருக்கும்போதே 5 சுளைகளில் 2-க்கும் மேற்பட்ட சுளைகளை புழுக்கள் தின்றுவிடுகின்றன. மீதமுள்ள 2 சுளைகளும் வெடித்த பிறகு அதில் இருக்கும் விதைகளையும் தின்று விடுவதால் பருத்தியின் எடை குறைவதோடு, பருத்தி எடுப்பதற்கான ஆட்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இந்த வருடம் விலையும் கட்டுப்படியாக இல்லை. எனவே விவசாயிகளின் நலன் கருதி விற்கப்படும் விதைகள் முறையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவதோடு, பூச்சிகள் மற்றும் புழுக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்த எளிய வழிமுறைகளை வேளாண் துறை அறிமுகம் செய்ய வேண்டும். குறிப்பாக உரிய விலை கிடைக்க மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் ஆவண செய்தால் சிறப்பாக இருக்கும்.
கருகி விடுகிறது
ஆலத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி ராமராஜ்:- பருத்தி சாகுபடி செய்யப்படும் நிலையில், அது தொடர்பான வேலைக்கு ஆட்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் தொழிலாளர்களின் கூலி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. உழுதல், உரம் வைத்தல், எரு அடித்தல் முதலானவற்றை செய்தால் மட்டுமே மூன்றில் ஒரு பாகம் நன்கு விளைகிறது. பெரும்பாலும் பருத்திச்செடிகள் அடர்பனி காலத்தில் கருகி விடுகிறது. இ்த்தகைய சூழ்நிலைகளை தாண்டி பருத்தி சாகுபடி செய்தபோதும், விலை படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் அறுவடை செய்யும் காலத்தில் விலை வீழ்ச்சியை சந்திப்பதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தற்போது பருத்தி கிலோ ரூ.80 என தோராயமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் விலை ரூ.100-ஐ தாண்டினால்தான் விவசாயிகள் பலனடைய முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.