திருக்காட்டுப்பள்ளியில், புறவழிச்சாலை பணிகள் தொடங்கப்படுமா?
திருக்காட்டுப்பள்ளியில் புறவழிச்சாலை பணிகள் தொடங்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி, அக்.4-
திருக்காட்டுப்பள்ளியில் புறவழிச்சாலை பணிகள் தொடங்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கிராமங்கள்
தஞ்சை மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று திருக்காட்டுப்பள்ளி. திருக்காட்டுப்பள்ளியை சுற்றி 100-க்கும் மேற்பட்ட சிறு கிராம மக்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் தங்களுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவும் மருத்துவ தேவைகளுக்காகவும் திருக்காட்டுப்பள்ளிக்கு வந்து செல்கிறார்கள்.இதனால் திருக்காட்டுப்பள்ளி கடை வீதியில் எந்த நேரமும் மக்கள் வந்து சென்ற வண்ணம் இருப்பார்கள். திருக்காட்டுப்பள்ளியில் 3 மேல்நிலைப் பள்ளிகள், 2 உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. திருச்சி- தஞ்சை மாவட்டங்களை இணைக்கும் வகையாக கொள்ளிடம் ஆற்றில் பூண்டி அருகே பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
மணல் குவாரிகள்
இதனால் லால்குடி, சமயபுரம், அன்பில், ஆகிய ஊர்களுக்கு எளிதில் சென்று வர முடிகிறது. மேலும் கல்லணையில் திருச்சியையும் தஞ்சையும் இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கொள்ளிடம் ஆற்றில் இரண்டு மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு தினமும் மணல் ஏற்றியபடி லாரிகள் திருக்காட்டுப்பள்ளி வழியாக சென்று வந்தன.
போக்குவரத்து நெரிசல்
கடந்த செப்டம்பர் 12-ந் தேதி முதல் மணல் குவாரி செயல் படாததால் மணல் லாரிகள் வருவதில்லை. இருப்பினும், திருக்காட்டுப்பள்ளியில் பழமானேரி சாலை சந்திப்பில் இருந்து போலீஸ் நிலையம் வரை உள்ள சாலையில் வணிக நிறுவனங்கள் இரு புறமும் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.வரும் பண்டிகை காலங்கள் தொடர்ந்து சுப முகூர்த்த தினங்களில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாத அளவுக்கு உள்ளது. மேலும் வணிக நிறுவனங்களுக்கு வருபவர்கள் வணிக நிறுவனங்கள் முன்பு இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதாலும், வணிக நிறுவனங்கள் விளம்பரபதாதைகளை அவர்கள் நிறுவனத்திற்கு முன்பாக அமைத்திருப்பதாலும், தினமும் திருக்காட்டுப்பள்ளி கடை வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
புறவழிச்சாலை
குறிப்பாக சாலையின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். திருக்காட்டுப்பள்ளி நகரில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க புறவழிச்சாலை அமைக்கப்படும் என்று சொல்லப்பட்டது. அதற்கான நில எடுப்பு பணிகள் தொடங்கின. நில எடுப்பு பணிகளில் வழக்கம் போல ஆதரவு, எதிர்ப்பு நிலவியதால் புறவழிச் சாலை தொடங்குவது குறித்து விவரம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
நடவடிக்கை
காலை, மாலை நேரங்களில் பள்ளிகள் திறக்கும் நேரத்திலும் பள்ளிகள் முடியும் நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது ஏராளமான மக்கள் திருக்காட்டுப்பள்ளிக்கு பொருட்கள் வாங்க வரும்போது போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமாக கூடிய வாய்ப்பு ஏற்படும்.எனவே திருக்காட்டுப்பள்ளி நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.