போக்குவரத்துக்கு இடையூறாக நீண்ட நாட்களாக சாலை ஓரத்தில் நிற்கும் வாகனங்கள் ஏலம் விடப்படும் - சென்னை மேயர் அறிவிப்பு


போக்குவரத்துக்கு இடையூறாக நீண்ட நாட்களாக சாலை ஓரத்தில் நிற்கும் வாகனங்கள் ஏலம் விடப்படும் - சென்னை மேயர் அறிவிப்பு
x

போக்குவரத்துக்கு இடையூறாக நீண்ட நாட்களாக சாலை ஓரத்தில் நிற்கும் வாகனங்கள் ஏலம் விடப்படும் என மேயர் பிரியா தெரிவித்தார்.

சென்னை

ஆலோசனை கூட்டம்

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் நேற்று மேயர் பிரியா தலைமையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை அகற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர் லலிதா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தில் மேயர் பிரியா பேசியதாவது:-

ஏலம் விடப்படும்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சென்னை போலீஸ் மற்றும் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து நீண்ட காலமாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்தி, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாநகராட்சி பகுதிகளில் ஆயிரத்து 38 வாகனங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து அப்புறப்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்பின்னரும், அப்புறப்படுத்தப்படாத வாகனங்களை செப்டம்பர் 1-ந்தேதி முதல் போலீசார் உதவியுடன் அப்புறப்படுத்தி மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டு ஏலம் விடப்படும்.

எனவே, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் வகையிலும் நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை அதன் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story