கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என நோயாளிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி செயல்பட்டு வந்தது. இதையடுத்து பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளுடன் நவீன முறையில் சிகிச்சை அளிக்கும் வகையில் கள்ளக்குறிச்சியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறுவங்கூர் சமத்துவபுரம் அருகில் ரூ.398 கோடியே 55 லட்சம் மதிப்பில் மருத்துவக்கல்லூரியுடன் ஆஸ்பத்திரி கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக 6 மாடியுடன் மருத்துவக்கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி கள்ளக்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவக்கல்லூரியை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து 700 படுக்கை வசதிகளுடன் பொதுமக்களுக்கு அனைத்துவிதமான சிகிச்சை அளிக்கும் வகையில் ஆஸ்பத்திரி கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 11-ந்தேதி ஆஸ்பத்திரி கட்டிடத்தை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்து மருத்துவ சேவையை தொடங்கி வைத்தனர்.
அதிக கட்டணம்
இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் இயங்கி வந்த அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி தற்போது சிறுவங்கூர் சமத்துவபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்த திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், சங்கராபுரம், கல்வராயன்மலை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் கள்ளக்குறிச்சிக்கு வந்து அங்கிருந்து சிறுவங்கூர் சமத்துவபுரத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இருப்பினும் கிராம புறங்களை சேர்ந்த ஏழை எளிய பொதுமக்கள் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து 4 கி.மீட்டர் தொலைவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிரமம் இன்றி சென்று வர போதுமான அளவுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பொது மக்கள் வேறு வழியின்றி அதிக கட்டணம் செலுத்தி ஷேர் ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலைமை உள்ளதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதை தவிர்க்க கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு செல்ல கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது குறித்து பொதுமக்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-
2 மணி நேரம் காத்திருப்பு
வாழவந்தான் குப்பத்தை சேர்ந்த கோலம்மாள் கூறுகையில், எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நான் வாழவந்தான்குப்பம் கிராமத்திலிருந்து கள்ளக்குறிச்சி வந்து சுமார் 2 மணி நேரம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தேன். ஆனால் பஸ் கிடைக்காததால் வேறு வழியின்றி ஷேர் ஆட்டோவில் ரூ.20 கொடுத்து ஆஸ்பத்திரிக்கு சென்றேன். இருப்பினும் ஷேர் ஆட்டோவில் 10-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றுவதால் கூட்ட நெரிசலில் சிக்கி மிகவும் பாதிப்படைந்தேன். இதுவே அரசு பஸ் போதுமான அளவுக்கு இயக்கினால் நான் மகளிர் பஸ்சில் கட்டணம் இன்றி ஆஸ்பத்திரிக்கு சென்று வந்து இருப்பேன். வசதி இல்லாத காரணத்தினால் தான் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்கிறோம். ஆனால் கூடுதல் அரசு பஸ் வசதி இல்லாததால் அதிக கட்டணம் கொடுத்து ஷேர் ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கள்ளக்குறிச்சியில் இருந்து ஆஸ்பத்திரிக்கு செல்ல கூடுதலாக அரசு பஸ் இயக்க வேண்டும்.
இரவு நேரத்தில் பஸ் வசதி இல்லை
வேளானந்தல் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து கூறுகையில்,
ஏழை எளிய மக்களான எங்களை போன்றவர்களுக்காகத்தான் அரசு பல கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கள்ளக்குறிச்சி சிறுவங்கூர் சமத்துவபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கட்டப்பட்டது. இருப்பினும் நாங்கள் அங்கு சிரமமின்றி சென்று சிகிச்சை பெற கூடுதல் பஸ் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. தினமும் கள்ளக்குறிச்சியில் இருந்து சமத்துவபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வழியாக காலை 5 மணி, 8 மணி, 9 மணி, மாலை 3 மணி, 5 மணிக்கு மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த வசதி போதுமானது இல்லை. குறிப்பாக இரவு நேரத்தில் பஸ் வசதி இல்லாததால் நாங்கள் பெரும் சிரமம் அடைந்து வருகிறோம். ஷேர் ஆட்டோவில் சென்று வருவதால் ரூ.40 செலவாகிறது. இதுவே பஸ்சில் சென்று வந்தால் எங்களுக்கு ரூ.16 மட்டுமே செலவாகும்.
அதேபோல் சங்கராபுரம் பகுதியில் இருந்து வருபவர்கள் ரோடு மாமனந்தல் பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து அவர்கள் ஷேர் ஆட்டோவில் ரூ.10 கொடுத்து ஒரு கீலோ மிட்டர் தொலைவில் உள்ள மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு செல்கின்றனர்.
அதிக கட்டணம் கொடுத்து செல்வதால் எங்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு என்று தனியாக போர்டு வைத்து கூடுதல் பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஏழை எளிய மக்கள் மேலும் பயன் அடைவார்கள்.