மருந்து, மாத்திரை வழங்க கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்கப்படுமா? நோயாளிகள் எதிர்பார்ப்பு
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கூட்டம் அதிகரித்து வருவதால் மருந்து, மாத்திரைகள் வழங்க கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்கப்படுமா? என்று நோயாளிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கூட்டம் அதிகரித்து வருவதால் மருந்து, மாத்திரைகள் வழங்க கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்கப்படுமா? என்று நோயாளிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
அரசு மருத்துவமனை
பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு பொது மருத்துவம், குழந்தைகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மகளிர் நோய் மற்றும் மகப்பேறு பிரிவு, பிரசவ பிரிவு, இருதய பிரிவு, சிறுநீரக பிரிவு, புற்றுநோய் பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, கண் நோய் பிரிவு, தோல் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன.
இங்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி
இதேபோல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியும் செயல்பட்டு வருகிறது இங்கு சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு, இருதய அறுவை சிகிச்சை பிரிவு, நரம்பியல் உள்ளிட்ட பிரிவுகளும் உள்ளது. இங்கு ஏராளமான நோயாளிகள் வந்து உயர்தர சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இங்கும் தினமும் ஏராளமான அறுவை சிகிச்சைகளும், சிறப்பு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு டயாலிசிஸ் செய்யும் வசதியும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
மருந்து வாங்குவதற்கு
இந்த ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், வெளிநோயாளிகளாக பல்லாயிரக்கணக்கானவர்களும் சிகிச்சை பெறுகின்றனர். இங்குள்ள ரத்த பரிசோதனை மையத்தில் மக்கள் ஏராளமாக திரண்டு வந்து ரத்த பரிசோதனை செய்து வருகிறார்கள்.
இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கும், உள்நோயாளிகளுக்கும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முன் உள்ள புறக்காவல் நிலையம் இருந்த இடத்தில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
அதுபோல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் தரைத்தளத்தில் முகப்பு பகுதியில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இதை வாங்க தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கிறார்கள்.
கூடுதல் கவுண்ட்டர்கள்
இதனால் மருந்து, மாத்திரைகள் வழங்கக்கூடிய கவுண்ட்டர்களில் நோயாளிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் புற்றுநோய், சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெற வருகிறவர்கள், மாதக்கணக்கில் மாத்திரை சாப்பிடுகிறவர்கள் மற்றும் சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிடுபவர்கள் வந்து மாத்திரை வாங்குகிறார்கள்.
இதனால் மருந்து, மாத்திரை கவுண்ட்டர்களில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. அவர்கள் வரிசையில் ஒரு மணி நேரம் காத்திருந்து மருந்து, மாத்திரைகள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. நோயாளிகள் என்பதால் சில நேரங்களில் பலர் மயங்கி விழும் அபாயமும் உள்ளது. எனவே, கூடுதல் கவுண்ட்டர்கள் திறந்து மாத்திரைகள் வழங்க வேண்டும் என்று நோயாளிகளும், நோயாளிகளின் உறவினர்களும் எதிர்பார்த்து உள்ளனர்.
நோயாளிகள் கோரிக்கை
நெல்லை பேட்டையை சேர்ந்த புற்றுநோயாளி இசக்கிமுத்து:-
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய்க்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், டாக்டர்கள் எழுதி கொடுக்கும் மருந்து, மாத்திரைகளில் சில மாத்திரைகள் இங்கு அவ்வப்போது கிடைப்பது இல்லை. அந்த மாத்திரைகளை வெளியே உள்ள மருந்து கடைகளில் அதிக விலைக்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, அனைத்து நோய்களுக்கான மருந்து, மாத்திரைகள் இங்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமாதானபுரத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ராஜூ:-
இங்கு மருந்து, மாத்திரைகள் வழங்கும் இடத்தில் 4 கவுண்ட்டர்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு கவுண்ட்டர்களிலும் ஒவ்வொரு நோய் பிரிவுக்கு மாத்திரைகள் வழங்கப்படுகிறது. ஆனால் முதல் கவுண்ட்டரில் மட்டும் பல்வேறு நோய்களுக்கும், பல வார்டுகளை சோ்ந்த நோயாளிகளுக்கும் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அதிக நேரம் காத்திருந்து மருந்து, மாத்திரைகள் வாங்க வேண்டிய நிலை உள்ளது.
2-ஆக பிரித்து...
மேலக்குளம் நடுவூரை சேர்ந்த நாராயணன்:-
இங்கு மருந்து, மாத்திரைகள் வாங்க காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. என்னை போன்ற முதியவர்கள் சிரமப்படுகிறார்கள். முதல் கவுண்ட்டரை இரண்டாக பிரித்து மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீவலப்பேரி அருகே உள்ள தோணிதுறையை சேர்ந்த கர்ப்பிணி அலமேலு மங்கை:-
இங்கு 4 கவுண்ட்டர்களில் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. ஆனால் முதல் கவுண்ட்டரில் மட்டும் எலும்பு தொடர்பாக நோயாளிகள், குழந்தைகள் பிரிவு, மகப்பேறு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றது. இதனால் எப்போதும் இந்த கவுண்ட்டரில் மட்டும் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. என்னை போன்ற கர்ப்பிணிகள் நீண்ட நேரம் வரிசையில் நின்று மாத்திரை வாங்க சிரமமாக உள்ளது. எனவே, முதல் கவுண்ட்டரை 2-ஆக பிரித்து கர்ப்பிணிகளுக்கு தனியாக மாத்திரைகள் வழங்கினால் நன்றாக இருக்கும்.