ரவுண்டானா அமைத்து தரப்படுமா?


ரவுண்டானா அமைத்து தரப்படுமா?
x

ரவுண்டானா அமைத்து தரப்படுமா?

திருவாரூர்

திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை செல்லும் சாலையில் ரவுண்டானா அமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலை

திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. திருத்துறைப்பூண்டி நகரத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலை இணையும் இடத்தில் ராமநாதபுரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருவனந்தபுரம், கொச்சின் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்கள் வருகின்றன. இதனால் அந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கும், நாகூர் தர்காவிற்கும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. காரைக்கால், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, செருதூர் உள்ளிட்ட மீன்பிடி தளங்களில் இருந்து ஏராளமான மீன்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சின் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய வாகனங்களும் இந்த வழியாகத்தான் போகிறது.

ரவுண்டானா அமைக்க வேண்டும்

திருத்துறைப்பூண்டியில் இருந்து செல்லும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை இணையும் இடத்தில் போகும் போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் இருசக்கர வாகனத்தில் செல்வோர், நடந்து செல்வோர், சைக்கிளில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

இந்த இடத்திலிருந்து திருவாரூர் சாலையை இணைக்கும் புறவழிச்சாலை பணிகள் நடைபெறுகிறது. இதில் கனரக வாகனங்கள் அந்த இடத்தில் திரும்புகின்றன.

அப்போது வெளியூரில் இருந்து வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்துகளை தவிர்க்க கிழக்கு கடற்கரை சாலை இணையும் இடத்தில் ரவுண்டானா அமைத்து 3 புறங்களிலும் வேகத்தடை அமைத்து தானியங்கி சோலார் மின்விளக்குகள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழிப்புணர்வு பலகைகள்

இதுகுறித்து வக்கீல் கார்த்தி கூறுகையில், திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் இணையும் இடம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ராமநாதபுரம், மற்றும் பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் செல்ல திரும்பும் போது திருத்துறைப்பூண்டியில் இருந்து செல்லும் வாகன ஓட்டிகள் அந்த இடத்தில் விபத்தில் சிக்குகின்றன. எனவே அந்த இடத்தில் ரவுண்டானா அமைத்து போதிய விழிப்புணர்வு பலகைகள் வைக்க வேண்டும் என்றார்.

சோலார் விளக்குகள் வைக்க வேண்டும்

இதுகுறித்து ராஜ் கூறுகையில், திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தலைஞாயிறு, அருந்தவம்புலம், கொருக்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வாகன ஓட்டிகள் இந்த இடத்தில் மிகவும் கவனமாக செல்ல வேண்டிய சூழல் உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள் இந்த இடத்தில் திரும்பும் போது அந்த வாகனங்களும் விபத்தில் சிக்குகின்றன. திருத்துறைப்பூண்டியில் இருந்து செல்லும் வாகனங்களும் விபத்தில் சிக்குகின்றன. கொருக்கை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவ- மாணவிகள் இந்த இடத்தில் வந்து இறங்குகிறார்கள். இந்த இடத்தில் இருந்து பஸ்களில் ஏறுகிறார்கள். தென் மாவட்டங்கள் செல்லும் வாகனங்களில் வரும் பொதுமக்கள் நகரத்திற்குள் பஸ்கள் வராததால் இந்த இடத்தில் இறங்கி திருத்துறைப்பூண்டிக்கு நடந்து செல்வார்கள். எனவே அந்த இடத்தில் உடனடியாக ரவுண்டானா அமைத்து 3 புறங்களிலும் வேகத்தடை அமைத்து போதிய சோலார் விளக்குகள் வைக்க வேண்டும் என்றார்.


Next Story