பரளச்சியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?


100 கிராம மக்கள் பயனடையும் வகையில் பரளச்சியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

திருச்சுழி,

100 கிராம மக்கள் பயனடையும் வகையில் பரளச்சியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயம் நிறைந்த பகுதி

திருச்சுழி ஒன்றியத்தில் பரளச்சி, பூலாங்கால், செட்டிக்குளம், கீழ்க்குடி, மேலையூர், வடக்குநத்தம், புள்ள நாயக்கன்பட்டி, வடக்கு நத்தம், ராணி சேதுபுரம், சளுக்குவார்பட்டி, தும்மு சின்னம்பட்டி, மறவர் பெருங்குடி, மண்டபசாலை, ஆர்.கல்லுமடம், காளையார் கரிசல் குளம் உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் விவசாயத்தை நம்பி தான் வாழ்ந்து வருகின்றனர். இங்கு பழத்தோட்டங்கள், கரும்பு தோட்டங்கள், கல்குவாரிகள், சோலார் பிளாண்ட் ஆகியவை உள்ளன. இந்த கிராமங்களின் மையப்பகுதியில் தான் பரளச்சி அமைந்துள்ளது.

100 கிராமங்கள்

100 கிராமங்களின் மையப்பகுதியான பரளச்சி கிராமத்தில் தீயணைப்பு நிலையம் இல்லை. இந்த பகுதியில் தீவிபத்து ஏதேனும் ஏற்பட்டால் பரளச்சியிலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள அருப்புக்கோட்டைக்கு செல்ல வேண்டும்.

அவ்வாறு இல்லையென்றால் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்சுழி தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைக்கும் வாகனம் வர வேண்டும்.

மேற்கண்ட பகுதிகளில் ஏதேனும் தீவிபத்து ஏற்பட்டால் நீண்ட தூரத்தில் இருந்து வருவதற்குள் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகி விடுகிறது.

தீயணைப்பு நிலையம்

எனவே பரளச்சியில் தீயணைப்பு நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவ்வாறு தீயணைப்பு நிலையம் அமைத்தால் தேவையற்ற பொருள் இழப்பை தடுக்கலாம் என்கின்றனர் விவசாயிகள்.

பயிர்கள் எரிந்து நாசம்

இதுகுறித்து பரளச்சியை சேர்ந்த விவசாயி திருக்கண்ணன் கூறியதாவது:- பரளச்சி கிராமபகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் திருச்சுழி அல்லது அருப்புக்கோட்டையில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுப்போம். அங்கிருந்து தீயணைப்பு வாகனம் வர 1 மணி நேரத்தை தாண்டி விடும். இதற்கிடையே அருப்புக்கோட்டையில் உள்ள தீயணைப்பு வாகனம் வேறு பகுதிக்கு சென்று விட்டால் பரளச்சியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள கமுதி தீயணைப்பு நிலையத்திலிருந்து தான் வாகனம் வரவேண்டும். திருச்சுழி ஒன்றியத்தில் பெரும்பாலான இடங்களில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு தீவிபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வாகனம் வருவதற்குள் முழுவதும் எரிந்து நாசமாகி விடுகிறது. இதனால் எண்ணற்ற விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்குள் பொருட்கள், பயிர்கள் என அனைத்தும் எரிந்து நாசமாகி விடுகிறது. எனவே பரளச்சியில் தீயணைப்புநிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தீயை அணைப்பதில் தாமதம்

கா.விலக்கு பகுதியை சேர்ந்த ஜெயராமன் கூறியதாவது:- தீ விபத்து முன்கூட்டியே சொல்லிக்கொண்டு வருவதில்லை. எதிர்பாராமல் நடக்கக்கூடியது. எந்த நேரமும் தீ எதுவும் பிடிக்காமல் இருப்பதற்கு மிக கவனமாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் பரளச்சி பகுதியில் உள்ள கரும்புத்தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதுமட்டுமின்றி எண்ணற்ற கடைகளும் எரிந்து சாம்பல் ஆனது. இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நிகழக்கூடியது ஆகும். ஆதலால் பெரிய அளவில் ஏற்படும் தீயை அணைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. தீயினால் ஏற்படும் சேதங்கள் அதிகரிக்கின்றது. உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆதலால் பரளச்சியில் தீயணைப்பு நிலையம் அமைத்தால் தேவையற்ற விபத்துகளை தடுக்கலாம் என்றார்.


Next Story