வன விலங்குகளை விரட்டும் மூங்கில் கருவி அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைப்பு
வன விலங்குகளை விரட்டும் மூங்கில் கருவி கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வன விலங்குகளை விரட்டும் மூங்கில் கருவி கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
மூங்கில் கருவி
கிருஷ்ணகிரி மாவட்டம், வனப்பகுதியை ஒட்டியுள்ளதால், கேரளாவின் பசுமையான வனங்களைப் போல் இருக்கும். விவசாய நிலங்கள் வனப்பகுதியையொட்டி உள்ளதால், யானை, காட்டுப் பன்றிக் கூட்டங்கள் அடிக்கடி வந்து விவசாய நிலங்களை நாசம் செய்துவிடும். விலங்குகளை விரட்ட மின்வேலி, பட்டாசு போன்றவற்றைக் கிராம மக்கள் பயன்படுத்துவது இல்லை. காவலும் காப்பதில்லை.
ஆனால் விலங்குகளிடம் இருந்து பயிர்களைக் காக்க அவர்கள் பயன்படுத்திய வழிமுறைதான் மூங்கில் கருவிகள். மூங்கிலின் மூன்று கணுக்களை முழுசாக வெட்டி எடுத்துக் கொண்டு, நடுக் கணுவில் வாசல் போலத் துளையிட்டு காற்றோட்டம் இருக்கும்படி செய்கின்றனர்.
மத்தளம் போல் சத்தம்
மேல், கீழ் கணுக்களைச் செதுக்கி வில்லைப் போல வளைத்து, கயிற்றை இறுக்கிக் கட்டிக் கொள்கின்றனர். இப்போது அம்பு போல ஒரு குச்சியை அந்தக் கயிற்றில் கட்டிவிடுகிறார்கள். இதைப் போல நிறைய செய்து விவசாய நிலத்தை சுற்றி இருக்கும் மரங்களில் கட்டி தொங்க விடுகின்றனர். காற்று வீசும் போது மூங்கில் மரத்தில் மோதும்.
அப்போது மத்தளம் போல சத்தம் வரும். மேலும் மூங்கில் தட்டி, மனிதன் நிற்பது போல் காட்சியளிப்பதாலும், சத்தத்தாலும், யானை, பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் அனைத்தும் இந்த சத்தம் கேட்டு ஓடிப்போய் விடும். இந்த மூங்கில் கருவி, தேன்கனிக்கோட்டை தாலுகா கொடக்கரையை அடுத்த தொட்டியூர் கிராமத்தில் இருந்து சேகரிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.