வனவிலங்குகள் சரணாலயம் அமைக்க வேண்டும்


வனவிலங்குகள் சரணாலயம் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மலை கிராம மக்கள், பழங்குடியின மக்கள் பாதிக்கப்படாத வகையில் வனவிலங்குகள் சரணலாயம் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.

கிருஷ்ணகிரி

மலை கிராம மக்கள், பழங்குடியின மக்கள் பாதிக்கப்படாத வகையில் வனவிலங்குகள் சரணலாயம் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.

படத்திறப்பு

கிருஷ்ணகிரி பழையபேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், தமிழ் மாநில கட்டிட நிதியளிப்பு, மத்தியகுழு முடிவுகளை விளக்கியும் மற்றும் மூத்த நிர்வாகி நாகரத்தினம் அண்ணாஜியின் படத்திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் தலைமை தாங்கினார்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு நாகரத்தினம் அண்ணாஜியின் உருவப்படத்தை திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், இருதயராஜ் சாம்ராஜ், கோவிந்தசாமி, ஆஞ்சலாமேரி, சுரேஷ், பிரகாஷ், ஜெயராமன், மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருநங்கைகளுக்கான நலவாரியம்

திருநங்கைகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். படித்த திருநங்கைகளுக்கு குறிப்பிட்ட அளவு சதவீத இடஒதுக்கீடு வழங்கி வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்யும் சட்ட மசோதா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது மாநில மக்களை வஞ்சிக்கின்ற செயலாகும். எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கவர்னரை திரும்ப பெறுகின்ற மனுவை நிறைவேற்றிட வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 686.406 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வனப்பகுதியை, காவிரி தெற்கு வன உயிரின சரணாலயமாக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் எல்லைக்குள் வரும் 195 கிராம மக்கள் மற்றும் வனப்பகுதியையொட்டி வாழும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மலை கிராம, பழங்குடியின மக்கள் பாதிக்கப்படாத வகையில் வனஉரிமை சட்டத்தின் கீழ் 3 கிலோ மீட்டர் தூரம் தொலைவில் தான் வனவிலங்குகள் சரணலாயம் அமைக்க வேண்டும்.

நகைக்கடன் தள்ளுபடி

தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்க நடவடிக்கை மேற்கொள்வதை வரவேற்கிறோம். கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி செய்வதில் நிபந்தனைகள் தளர்த்தப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சட்டப்படி ஊதியம் வழங்க வேண்டும்.

தேர்தலின் போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை உரிய காலஅவகாசத்துடன் நிறைவேற்றும். கிருஷ்ணகிரியில் நகரில் உள்ள அரசு மருத்துவமனை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story