வீட்டை இடித்து தள்ளிய காட்டு யானைகள்
வால்பாறையில் வீட்டை காட்டு யானைகள் இடித்து தள்ளின. இதில் சத்துணவு அமைப்பாளர் குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
வால்பாறை பகுதியில் பல்வேறு எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாகவும் ஒற்றையாகவும் சுற்றித்திரிந்து வருகிறது. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆனைமுடி, நல்லமுடி மற்றும் தாய்முடி எஸ்டேட் பகுதியில் 9 யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டு சுற்றித்திரிந்து வந்தது. இந்த யானைகள் கூட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் தாய்முடி எஸ்டேட் மத்திய பிரிவு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது.
பின்னர் குடியிருப்பு பகுதியில் இருந்த மாரியம்மன் கோவிலின் கதவு ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
எஸ்டேட் தொழிலாளர்கள் கூச்சலிட்டு விரட்டியதும் அங்கிருந்து சென்ற யானைகள் குடியிருப்பு பகுதியில் இருந்த சத்துணவு அமைப்பாளர் சாந்தகுமாரி என்பவரின் வீட்டை உடைத்து இடித்து தள்ளியதோடு, உள்ளே நுழைய முயற்சித்துள்ளது. அதற்குள் குடியிருப்பு பகுதி மக்கள் விழித்துக் கொண்டு வனத் துறையினருடன் இணைந்து காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டியுள்ளனர். வீட்டில் இருந்து அனைவரும் வெளியேறியதால் சத்துணவு அமைப்பாளர் குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
அங்கிருந்து சென்ற யானைகள் தாய்முடி எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள வனப் பகுதியில் முகாமிட்டு நின்று வருகிறது. மானாம்பள்ளி வனத்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.