ரேஷன் கடையை உடைத்த காட்டுயானைகள்


ரேஷன் கடையை உடைத்த காட்டுயானைகள்
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அருகே ரேஷன் கடையை உடைத்து காட்டுயானைகள் தொடர் அட்டகாசம் செய்து வருகின்றன. அவை அரிசி மூட்டைகளை வனப்பகுதிக்கு தூக்கி சென்றன.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அருகே ரேஷன் கடையை உடைத்து காட்டுயானைகள் தொடர் அட்டகாசம் செய்து வருகின்றன. அவை அரிசி மூட்டைகளை வனப்பகுதிக்கு தூக்கி சென்றன.

காட்டுயானைகள் முகாம்

வால்பாறை பகுதியில் பல்வேறு எஸ்டேட்டுகளில் காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகிறது. இதில் 11 யானைகள் கொண்ட கூட்டம், தொடர்ந்து கூழாங்கல் ஆற்றை ஒட்டிய தேயிலை தோட்ட பகுதியில் முகாமிட்டு வருகிறது. சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் முகாமிட்டிருந்த ஒரு குட்டியுடன் கூடிய 6 காட்டுயானைகள் கொண்ட கூட்டம், அங்கிருந்து சென்று கருமலை எஸ்டேட் பாலாஜி கோவிலை ஒட்டிய சிறுவனச்சோலை பகுதியில் முகாமிட்டு வந்தது.

இந்த யானைகள் கூட்டம், நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்கிருந்து கருமலை எஸ்டேட் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நுழைந்து கதவை சேதப்படுத்தி விட்டு, கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலத்தின் அடிவாரத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. இதை கண்ட தொழிலாளர்கள், காட்டுயானைகளை விரட்டியடித்தனர்.

ரேஷன் கடை உடைப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த வால்பாறை வனச்சரக வனத்துறையினர் விரைந்து வந்து, காட்டுயானைகள் நடமாட்டத்தை கண்காணித்தனர். மேலும் அவற்றை குடியிருப்புக்கு அருகில் உள்ள வனச்சோலைக்கு விரட்டி விட்டனர். எனினும் வனத்துறையினர் மற்றும் தொழிலாளர்கள் அங்கிருந்து சென்றதும் மீண்டும் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலத்திற்கு அடிவாரத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு ரேஷன் கடையின் மேற்கூரையை உடைத்து அட்டகாசம் செய்தன. மேலும் துதிக்கையை உள்ளே விட்டு 4 மூட்டை ரேஷன் அரிசியை வெளியே தூக்கி வீசி தின்றன. மேலும் ரேஷன் அரிசி மூட்டைகளை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள வனச்சோலைக்கு சென்றன.

அதிர்ச்சி

இந்த கருமலை எஸ்டேட் ரேஷன் கடை ஏற்கனவே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகில் செயல்பட்டு வந்தது. அந்த கடையை காட்டு யானைகள் 50-க்கும் மேற்பட்ட முறை உடைத்து சேதப்படுத்தியதால், அங்கிருந்து மாற்றி வேளாங்கண்ணி மாதா ஆலத்திற்கு செல்லும் வழியின் அடிவாரத்தில் உள்ள தொழிலாளர்கள் மனமகிழ்மன்ற இடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கும் வந்து காட்டுயானைகள் தொடர்ந்து சேதப்படுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆய்வு

இதையடுத்து அங்கு வந்த வால்பாறை தாசில்தார் விஜயகுமார், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, வட்ட வழங்கல் அலுவலர் சுந்தர்ராஜ், வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரன், கருமலை பகுதி வார்டு கவுன்சிலர் அன்பரசன், முன்னால் கவுன்சிலர் செல்வம் ஆகியோர் ரேஷன் கடையை ஆய்வு செய்தனர்.

மேலும் பொதுமக்களுக்கு தடையின்றி ரேஷன் பொருட்கள் வழங்கவும், அவற்றை பாதுகாப்பாக வைப்பதற்கு எஸ்டேட் நிர்வாகத்தினரிடம் பேசவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இது தவிர ரேஷன் பொருட்களை மொத்தமாக பாதுகாப்பான இடத்தில் வைத்து, அங்கிருந்து தேவையான அளவு மட்டும் எடுத்து வந்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story