காட்டு யானைகள் அட்டகாசம்
கடையநல்லூர் அருகே தோட்டத்தில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கல்லாறு மற்றும் சின்னாறு பகுதிகளில் பல ஏக்கரில் விளைநிலங்கள் உள்ளது. அதில் விவசாயிகள் தென்னை, வாழை, மா, நெற்பயிர்கள் போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர் அவ்வப்போது காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கடையநல்லூர் பீட் கல்லாறு காட்டுப்பகுதிகளில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை மரங்களையும், பாதுகாப்பு வேலியையும் சேதப்படுத்தியது.
தகவல் அறிந்ததும் கடையநல்லூர் வன ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் வனவர் முருகேசன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் விவசாயிகள் அங்கேயே முகாமிட்டு வெடிவைத்தும், சைரன் ஒலித்தும் வனப்பகுதிக்குள் யானைகளை விரட்ட முகாமிட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் குளிப்பதற்கு கல்லாறு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.