கூடலூர், தேவர்சோலையில் காட்டு யானைகள் அட்டகாசம்


கூடலூர், தேவர்சோலையில் காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 9 July 2023 2:30 AM IST (Updated: 9 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர், தேவர்சோலை பகுதியில் வீட்டின் மதிற்சுவர், வாழைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தின.

நீலகிரி

கூடலூர்

கூடலூர், தேவர்சோலை பகுதியில் வீட்டின் மதிற்சுவர், வாழைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தின.

காட்டு யானை

கூடலூர் கோக்கால் மலையடிவாரத்தில் சில காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. தொடர்ந்து இரவில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. கடந்த சில வாரங்களாக கூடலூர் கெவிப்பரா, ராக்லேண்ட் தெரு, அரசு தகைசால் மேல்நிலைப்பள்ளி, ஹெல்த்கேம்ப் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடலூர் தகைசால் மேல்நிலைப்பள்ளி அருகே இரவில் உலா வந்த யானையை, ஓவேலி சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் வனத்துறையினர் விரட்டினர். இதைத்தொடர்ந்து கூடலூர்-ஓவேலி சாலையில் காட்டு யானை நடந்து சென்று தனியார் எஸ்டேட் வழியாக கோக்கால் மலையடிவாரத்துக்கு சென்றது.

சுவரை உடைத்தது

இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு ராக்லேண்ட் தெருவுக்குள் காட்டு யானை புகுந்தது. பின்னர் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரின் வீட்டின் மதிற் சுவரை உடைத்து தள்ளி சேதப்படுத்தியது. இதனால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, தினமும் காட்டு யானை இரவில் வீடுகளை முற்றுகையிட்டு அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதேபோல் கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கர்க்கப்பாலி பகுதியில் காட்டு யானை நுழைந்தது. பின்னர் அதே பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரது வாழைகளை தின்று சேதப்படுத்தியது. தொடர்ந்து அப்பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் வந்து பயிர்களை நாசம் செய்வதால் நஷ்டத்துக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது என விவசாயிகள் கவலையுடன் கூறினர். எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story