கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை சாவு
மின்கம்பம் முறிந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது.
செத்து கிடந்த யானை
கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அருகே பூச்சியூர் பகுதியில் நேற்று காலை 22 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது. அதன் மேல் ஒரு மின்கம்பம் 2 ஆக முறிந்து கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். விசாரணையில், வனப்பகுதிக்குள் செல்லும்போது அந்த காட்டு யானை வழியில் இருந்த மின்கம்பத்தை வேகமாக உரசி இருக்கலாம். இதன் காரணமாக அந்த மின்கம்பம் திடீரென்று 2 துண்டாக முறிந்து யானையின் மீது விழுந்தது.
மின்சாரம் தாக்கி...
அதில் இருந்து சுதாரித்து எழுவதற்குள் மின்கம்பத்தில் இருந்த மின்வயர்கள் யானையின் மீது பட்டது. இதனால் மின்சாரம் தாக்கியதில் அந்த யானை பரிதாபமாக இறந்து இருக்கலாம் என்று தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை டாக்டர், யானையின் உடலை பரிசோதனை செய்தார். அதைத் தொடர்ந்து யானையின் உடல் வனப் பகுதிக்குள் அடக்கம் செய்யப்பட்டது.
மேலும் 3 யானைகள் சாவு
இதேபோல ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள முரளி பிரிவு தாளக்கரை தென் பர்கூர் காப்புக்காட்டில் ஒரு பெண் யானையும், அதன் அருகே 1½ வயது மதிக்கத்தக்க ஒரு குட்டி யானையும் செத்துக்கிடந்தன. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தியதில், பெண் யானை தனது குட்டியுடன் நடந்து சென்றபோது பள்ளத்தில் கால் தவறி உருண்டு விழுந்ததில், காயம் அடைந்து 2 யானைகளும் இறந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் முண்டந்துறை வனப்பகுதியில் மலையில் இருந்து தவறி விழுந்து 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடந்தது. அந்த யானை உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்து 10 நாட்களுக்கு மேல் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.