விளைநிலங்களில் புகுந்து வாழைகளை சேதப்படுத்திய காட்டு பன்றிகள்


விளைநிலங்களில் புகுந்து வாழைகளை சேதப்படுத்திய காட்டு பன்றிகள்
x

திருக்குறுங்குடி அருகே விளைநிலங்களில் காட்டு பன்றிகள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தியது.

திருநெல்வேலி

ஏர்வாடி:

திருக்குறுங்குடி அருகே விளைநிலங்களில் காட்டு பன்றிகள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தியது.

காட்டு பன்றிகள் அட்டகாசம்

திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடிபுதூர் கீழசேனி விளைநிலங்களில் சமீபகாலமாக காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. கடந்த 13-ந் தேதி இரவில் வனப்பகுதியில் இருந்து வெளி வந்த காட்டு பன்றிகள் கூட்டம் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதனால் 100-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானது.

இதற்கிடையே மீண்டும் நேற்று முன்தினம் இரவில் காட்டு பன்றிகள் கூட்டம், விளைநிலங்களுக்குள் நுழைந்து, வாழைகளை சாய்த்து அதன் குருத்துகளை தின்றுள்ளன. பன்றிகள் அட்டகாசத்தால் 200 வாழைகள் சேதமடைந்துள்ளது. இந்த வாழைகள் ஏத்தன் ரகத்தை சேர்ந்த 5 மாத வாழைகள் ஆகும். நாசமான வாழைகள் மாவடியை சேர்ந்த விவசாயிகள் ராமலிங்கம் (53), டேவிட் (51), ராஜலிங்கம் (52), வெள்ளத்துரை (58) ஆகியோருக்கு சொந்தமானது ஆகும். இதனால் அவர்களுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இழப்பீடு வழங்க கோரிக்கை

இதுபற்றி திருக்குறுங்குடி வனத்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இப்பகுதியில் காட்டு பன்றிகள் தொடர்ந்து வாழை மற்றும் விவசாய பயிர்களை துவம்சம் செய்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது:-

கடன் வாங்கியும், தங்கநகைகளை அடகு வைத்தும் பணம் பெற்று விவசாயம் செய்து வரும் நிலையில் காட்டு பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதால் கடனை அடைக்க முடியாமலும், நகைகளை மீட்க முடியாமலும் அவதிப்பட்டு வருகிறோம். மேலும் இப்பகுதி நிலங்கள் மடத்துக்கு சொந்தமானது ஆகும். அதனை குத்தகைக்கு பெற்று விவசாயம் செய்து வருகிறோம். வன விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதால் மடத்திற்கும் குத்தகை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே பன்றிகள் அட்டகாசத்தை தடுக்கவும், பயிர்கள் நாசமாகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.


Next Story