விளைநிலங்களில் காட்டுபன்றிகள் அட்டகாசம்: தடுப்புகள் அமைத்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரிக்கை


விளைநிலங்களில் காட்டுபன்றிகள் அட்டகாசம்: தடுப்புகள் அமைத்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரிக்கை
x
தினத்தந்தி 24 Nov 2022 12:15 AM IST (Updated: 24 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விளைநிலங்களில் காட்டுபன்றிகள் அட்டகாசத்தை தடுக்க, தடுப்புகள் அமைத்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே மேக்கரை கிராமம், மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் உள்ளது. இந்த கிராம மக்கள் விவசாயத்தை நம்பித்தான் வாழ்கை நடத்துகின்றனர். சமீபகாலமாக இவர்களுடைய விளைநிலங்களில் வனவிலங்குகள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக மேக்கரை விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் விவசாயி அருள்சேகர் தலைமையில் மேக்கரை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், "செங்கோட்டை அருகே அச்சன்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேக்கரை கிராமத்தில் நாங்கள் எங்கள் முன்னோர்கள் காலம் முதல் சுமார் 80 ஆண்டு காலத்திற்கும் மேலாக விவசாயம் செய்து வருகிறோம். எங்களுக்கு விவசாயமே வாழ்வாதாரமாக உள்ளது. நாங்கள் விளைநிலங்களில் மரவள்ளிக்கிழங்கு (கப்பைக் கிழங்கு), நெல், கடலை, வாழை, உளுந்து முதலான பயிர்களை பயிரிட்டு வருகிறோம். தற்போது இந்த பயிர்களை காட்டுப்பன்றிகள் சமீபகாலமாக மிகுந்த அளவில் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எங்களையும், எங்கள் பயிர்களையும் வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாத்திட தடுப்புகள் அமைக்க வேண்டும். காட்டுப்பன்றிகளால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்கி எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.


Next Story