விவசாய நிலங்களில் வன விலங்குகள் புகுவதை தடுக்க கோரிவனத்துறை அலுவலர்களை சிறைபிடித்த கிராம மக்கள்


விவசாய நிலங்களில் வன விலங்குகள் புகுவதை தடுக்க கோரிவனத்துறை அலுவலர்களை சிறைபிடித்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 20 Sept 2023 1:00 AM IST (Updated: 20 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

விவசாய நிலங்களில் வன விலங்குகள் புகுவதை தடுக்க கோரி வனத்துறை அலுவலர்களை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

தர்மபுரி

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே விவசாய நிலங்களில் வன விலங்குகள் புகுவதை தடுக்க கோரி வனத்துறை அலுவலர்களை கிராமமக்கள் சிறைபிடித்தனர்.

பயிர்கள் சேதம்

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பூதிப்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி உள்ளதால், யானைகள் மற்றும் காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து சாமை, கடலை, ராகி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

வன விலங்குகள் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க கோரி கிராமமக்கள் வனத்துறையினரிடம் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனிடையே நேற்று பென்னாகரம் வனசரக அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் பூதிப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதை அறிந்த கிராமமக்கள் வனத்துறை அலுவலர்களை சிறைபிடித்தனர்.

இழப்பீடு வழங்க வேண்டும்

அப்போது அவர்கள் வனத்துறை அலுவலர்களிடம் எங்களுடைய ஆடு, மாடு வனப்பகுதியில் மேய்ந்தால் அபராதம் வசூலித்து வழக்குப்பதிவு செய்கின்றனர். ஆனால் வனவிலங்குகள் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்கவில்லை. இதனால் வனவிலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

சேமடைந்த பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அலுவலர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்களை கிராமமக்கள் விடுவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story