ஊஞ்சலூர் அருகே ஆடு-கோழிகளை வேட்டையாடிய மர்ம விலங்கின் உருவம் கண்காணிப்பு கேமராவில் சிக்கியது
ஊஞ்சலூர் அருகே ஆடு-கோழிகளை வேட்டையாடிய மர்ம விலங்கின் உருவம் கண்காணிப்பு கேமராவில் சிக்கியது.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் அருகே ஆடு-கோழிகளை வேட்டையாடிய மர்ம விலங்கின் உருவம் கண்காணிப்பு கேமராவில் சிக்கியது.
ஆடு-கோழிகள் வேட்டை
ஊஞ்சலூர் அருகே உள்ள இச்சிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவில்புதூர் மற்றும் வாய்க்கால் செட் பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 4 இடங்களில் உள்ள பட்டியில் புகுந்த மர்ம விலங்கு 15 ஆடுகளையும், 35 கோழிகளையும் வேட்டையாடியது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அங்கு சென்ற வனத்துறையினர் சம்பவ இடங்களில் பதிவாகியிருந்த கால் தடங்களை ஆய்வு செய்தார்கள். மேலும் வேட்டையாடிய மர்ம விலங்கு மீண்டும் அதே இடங்களுக்கு வரலாம் என்று வனத்துறையினர் பெருமாள் கோவில் புதூரை சேர்ந்த சண்முகம் என்ற விவசாயியின் பட்டியில் கண்காணிப்பு கேமரா பொருத்தினார்கள்.
நாய் போலவே உள்ளது
இந்தநிலையில் நேற்று காலை வனத்துறையினர் தாங்கள் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்கள். அப்போது சண்முகத்தின் பட்டிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 1.25 மணி அளவில் மர்ம விலங்கு ஒன்று மோப்பம் பிடித்தபடி வருவது தெரிந்தது.
மேலும் பார்ப்பதற்கு நாய் போலவே இருக்கும் அந்த மர்ம விலங்கின் மூக்கும், வாயும் உள்ள பகுதி நீண்டும், வால் பகுதியும், காதுகளும் மேல்நோக்கி நீண்டபடியும் இருந்தன.
இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது, 'பார்ப்பதற்கு நாய் போலவே இருக்கும் அந்த விலங்கு நாய் அல்ல. அது என்ன விலங்கு என்று தொடர்ந்து கண்காணிக்கப்படும். அதுவரை பட்டியில் உள்ள ஆடு, கோழிகளை வளர்ப்பவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும்' என்று கூறினார்கள்.