சிவகிரி அருகே பரபரப்பு; நாயை கவ்விச்சென்ற மர்ம விலங்கு-


சிவகிரி அருகே பரபரப்பு; நாயை கவ்விச்சென்ற மர்ம விலங்கு-
x

சிவகிரி அருகே மர்ம விலங்கு நாயை கவ்விச்சென்றதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளார்கள்.

ஈரோடு

சிவகிரி

சிவகிரி அருகே மர்ம விலங்கு நாயை கவ்விச்சென்றதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளார்கள்.

மர்ம விலங்கு

சிவகிரி அருகே உள்ள அஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லசெல்லிபாளையம் எம்.ஜி.ஆர். நகரில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் நாய்கள் ஒன்றாக சேர்ந்து குரைக்கும் சத்தம் கேட்டது.

அந்த பகுதியில் வசிக்கும் அண்ணாமலை என்பவர் தூக்கம் கலைந்து எழுந்து வெளியே வந்து பார்த்தார்.

அப்போது ஒரு மர்ம விலங்கு 3 தெரு நாய்களுடன் சண்டையிடுவது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்தார். அதற்குள் அந்த மர்ம விலங்கு 3 நாய்களில் ஒரு நாயை கவ்விக்கொண்டு ஓடிவிட்டது.

கால் தடம்

நேற்று காலை இந்த தகவல் ஊர் முழுவதும் பரவியதால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்து மர்ம விலங்கு நாயை கவ்வி சென்ற இடத்துக்கு திரண்டு வந்து பார்த்தார்கள்.

மேலும் இதுகுறித்து அஞ்சூர் ஊராட்சி தலைவர் பிரகாசுக்கு தகவல் கொடுத்தார்கள். அவர் இதுபற்றி ஈரோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் வனக்காப்பாளர் மகேஷ்வரி சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பதிவாகியிருந்து மர்ம விலங்கின் கால் தடத்தை ஆய்வு செய்தார்.

பொதுமக்கள் பீதி

மேலும் அந்த பகுதியில் இருந்த ஒரு கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது மர்ம விலங்கு செல்வது தெரிந்தது. ஆனால் பனிசூழ்ந்த இரவு நேரம் என்பதால் அது என்ன விலங்கு என்று உறுதியாக தெரியவில்லை.

தொடர்ந்து ஆய்வு செய்து அது என்ன விலங்கு என்று கண்டுபிடிக்கிறோம். அதன்பின்னர் அதை பிடிக்கவோ அல்லது விரட்டியடிக்கவோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனக்காப்பாளர் மகேஷ்வரி கூறினார்.

நேற்று முன்தினம் ஊஞ்சலூர் அருகே உள்ள இச்சிப்பாளையம் ஊராட்சி பெருமாள்கோவில் புதூரில் மர்ம விலங்கு 15 ஆடுகளையும், 35 கோழிகளையும் கடித்து கொன்றது. மறுநாளே அருகே உள்ள சிவகிரி பகுதியில் மர்ம விலங்கு நாயை கவ்வி சென்றது அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story