தொழிலாளியை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி, கள்ளக்காதலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை


தொழிலாளியை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி, கள்ளக்காதலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை
x

தொழிலாளியை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி, கள்ளக்காதலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

கடலூர்

பண்ருட்டியை சேர்ந்தவர் துரை மகன் சீனிவாசன் (வயது 30), தொழிலாளி. இவா் சென்னையில் வேலை பார்த்து வந்தார். பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடியை சேர்ந்த இவரது உறவினர் மகள் கல்பனா (25) என்பவா், பண்ருட்டியை சோ்ந்த பத்மநாபன் மகன் தினேஷ் என்ற தினேஷ்பாபுவை (27) காதலித்து வந்துள்ளாா்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது பெற்றோர், கல்பனாவை கடந்த 31.5.2012 அன்று சீனிவாசனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் சென்னையில் வசித்து வந்தனர்.

கள்ளக்காதலுக்கு இடையூறு

இருப்பினும் கல்பனா, தனது காதலனுடன் செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதுபற்றி அறிந்த சீனிவாசன், அவரை கண்டித்துள்ளார். இதனால் கல்பனா தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சீனிவாசனை கொலை செய்ய, தினேசுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். அதன்படி திருமண நாளை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லலாம் எனக்கூறி சீனிவாசனை அழைத்துக் கொண்டு பண்ருட்டிக்கு வந்துள்ளார். பின்னர் 1.6.2013 அன்று கடலூர் சில்வர் பீச் சென்று சுற்றிப் பார்த்துள்ளனர். பின்னர் கடலூரில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளனர்.

குத்திக் கொலை

வீட்டுக்கு புறப்படும் முன்பு கல்பனா, செல்போனில் தினேசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் பண்ருட்டி அடுத்த ராசாப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் சென்றதும் அங்கு தயாராக இருந்த தினேஷ் மற்றும் அவரது நண்பர் முரளி ஆகியோர் மோட்டார் சைக்கிளை வழிமறித்துள்ளனர். பின்னர் சீனிவாசனை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் நகைக்காக கொலை நடந்தது போல் கல்பனா நாடகமாடினார். இருப்பினும் பண்ருட்டி போலீசார் நடத்திய விசாரணையில் கல்பனா தனது கள்ளக்காதலுடன் சேர்ந்து சீனிவாசனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கல்பனா, தினேஷ், முரளி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இரட்டை ஆயுள்

மேலும் இதுதொடர்பாக கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

அதன்படி நீதிபதி ஜவகர் தனது தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட கல்பனா, தினேஷ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், கல்பனாவுக்கு ரூ.4 ஆயிரமும், தினேசுக்கு ரூ.3 ஆயிரமும் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் முரளி, சாட்சியாக மாறியதால் அவர் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பக்கிரி ஆஜராகி வாதாடினார்.


Next Story