மனைவி அடித்துக்கொலை; தொழிலாளி கைது
சிவகிரியில் மனைவியை அடித்துக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகிரி:
சிவகிரியில் மனைவியை அடித்துக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்சூளை தொழிலாளி
தென்காசி மாவட்டம் சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சின்ன ஆவுடைப்பேரி கண்மாய் அருகில் தனியாருக்கு சொந்தமான செங்கல்சூளை உள்ளது. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். இவர்கள் செங்கல்சூளை வளாகத்திலேயே குடிசைகள் அமைத்து தங்கியுள்ளனர்.
மேற்கு வங்காள மாநிலம் நடியா சுண்டல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூன் மால் (வயது 38). இவருடைய மனைவி சாபி மால் (30). இவர்களுக்கு 10 வயதில் மகனும், 7 வயதில் மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் செங்கல்சூளையில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.
தகராறு
நேற்று முன்தினம் இரவில் அவர்கள் இருவரும் வழக்கம்போல் செங்கல்சூளையில் வேலைக்கு சென்றனர். பின்னர் நேற்று அதிகாலையில் வேலை முடிந்ததும், அவர்கள் தங்களது குடிசையில் தூங்க சென்றனர். அப்போது இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் அர்ஜூன் மால் தனக்கு டீ போட்டு தருமாறு மனைவியிடம் கேட்டார். உடனே அவர் டீ தயாரித்து கணவரிடம் கொடுத்துள்ளார். அப்போது அர்ஜூன் மால் டீ மிகவும் சூடாக இருப்பதாக கூறி, மனைவி சாபி மாலை அவதூறாக பேசி தாக்கினார். உடனே அவரும் பதிலுக்கு கணவரை தாக்கினர்.
அடித்துக்கொலை
அப்போது ஆத்திரமடைந்த அர்ஜூன் மால் அங்கு கிடந்த கம்பை எடுத்து சாபி மாலை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த சாபி மால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, சிவகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கைது
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த சாபி மாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அர்ஜூன் மாலை கைது செய்தனர். சிவகிரியில் மதுபோதையில் மனைவியை கணவரே அடித்துக் கொன்ற பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.