மனைவி, மாமனாரை தாக்கிய போலீஸ்காரர் கைது


மனைவி, மாமனாரை தாக்கிய போலீஸ்காரர் கைது
x
தினத்தந்தி 23 May 2023 6:45 PM GMT (Updated: 23 May 2023 6:45 PM GMT)

மார்த்தாண்டம் அருகே ரூ.25 ஆயிரம் தர மறுத்ததால் மனைவி, மாமனாரை தாக்கிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே ரூ.25 ஆயிரம் தர மறுத்ததால் மனைவி, மாமனாரை தாக்கிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

போலீஸ்காரர்

மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ் (வயது 34). இவர் நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜெனிபா (29). இவர்களுக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் ரூ.25 ஆயிரத்தை உனது பெற்றோரிடம் சென்று வாங்கி வா என தனது மனைவி ஜெனிபாவிடம் சிவப்பிரகாஷ் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஜெனிபா இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இது சிவப்பிரகாசுக்கு ஜெனிபா மீதான கோபத்தை அதிகரித்துள்ளது.

மனைவி, மாமனாரை தாக்கினார்

இந்தநிலையில் சம்பவத்தன்று சிவப்பிரகாஷ் மீண்டும் ரூ.25 ஆயிரம் பெற்றோரிடமிருந்து வாங்கி வருமாறு மனைவியிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் பெற்றோரிடம் பணம் இல்லை என்று ஜெனிபா தெரிவித்துள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த அவர் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதனை தட்டிக் கேட்ட ஜெனிபாவையும் அவர் தாக்கியுள்ளார்.

இதனை கேட்க வந்த மார்த்தாண்டம் அருகே கீழக்குறிச்சியை சேர்ந்த ஜெனிபாவின் தந்தை செல்வராஜ் (54), சித்தப்பா கனகராஜ் (50) ஆகியோரையும் சிவப்பிரகாஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது மீண்டும் ஜெனிபா தாக்கப்பட்டார். மேலும் சிவப்பிரகாஷின் செயலுக்கு சிலர் உடந்தையாகவும் இருந்துள்ளனர்.

கைது

இதுதொடர்பாக ஜெனிபா மார்த்தாண்டம் போலீசில் தனது கணவர் சிவப்பிரகாஷ், கணவரின் தந்தை நாகேந்திரன், கணவரின் தங்கை சரிதா மற்றும் உறவினர்கள் மணி, மேரி ஆகிய 5 பேர் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவப்பிரகாஷை கைது செய்தனர்.

மனைவியை தாக்கியதாக போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.


Next Story