கூலிப்படை வைத்து கள்ளக்காதலனுடன் கொலை செய்த மனைவி கைது
ஆரணியில் முன்னாள் ராணுவ வீரர் சாவில் திடீர் திருப்பமாக கூலிப்படை வைத்து கள்ளக்காதலனுடன் கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
ஆரணி
ஆரணியில் முன்னாள் ராணுவ வீரர் சாவில் திடீர் திருப்பமாக கூலிப்படை வைத்து கள்ளக்காதலனுடன் கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
முன்னாள் ராணுவ வீரர்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மொழுகம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 42), முன்னாள் ராணுவ வீரர்.
இவருடைய மனைவி ரேவதி (35). கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாக ரேவதி, குழந்தைகளுடன் ஒண்ணுபுரம் பகுதியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார்.
வெற்றிவேல் கடந்த 4-ந் தேதி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து காயம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவரை 5-ந் தேதி ரேவதி பார்க்க சென்றார். பின்னர் அன்றிரவு அவர் அங்கேயே தங்கினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வெற்றிவேல் மர்மமான முறையில் இறந்தார்.
தனிப்படை
இதையடுத்து தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக ஆரணி டவுன் போலீசில் ெவற்றிவேலின் தந்தை சின்னப்பையன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
கூலிப்படை வைத்து கொலை
இந்த நிலையில் ரேவதி, வெற்றிவேலின் தங்கையின் கணவரான காமக்கூர் காலனி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (40) ஆகிய இருவரும் ஆரணி நகர கிராம நிர்வாக அலுவலர் இளவரசன் முன்பு சரண் அடைந்தனர்.
அப்போது ரேவதி கூறுகையில், எனது கணவரை நானும், கள்ளக்காதலன் நாகராஜ், கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ் ஆகியோர் சேர்ந்து கழுத்தை நெறித்து கொலை செய்தோம் என வாக்குமூலம் கொடுத்தனர்.
இதையடுத்து இருவரையும் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். ஆரணி டவுன் போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.
வேலூர் கோர்ட்டில் ஆஜர்
இந்த நிலையில் வெற்றிவேல் கொலை வழக்கு தொடர்பாக வேலூரை அடுத்த கம்மசமுத்திரம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த வேலூர் மாவட்ட பட்டியல் அணி பா.ஜ.க. பொதுச்செயலாளர் ராஜேஷ் (33) வேலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு (எண்-4) கோர்ட்டில் நேற்று சரணடைந்தார்.
அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு ரோஸ்மேரி உத்தரவிட்டார்.
அதையடுத்து ராஜேஷ் பலத்த போலீஸ் காவலுடன் வேனில் அழைத்து செல்லப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.