குமரியில் பரவலாக மழை


குமரியில் பரவலாக மழை
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் பரவலாக மழை

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. திற்பரப்பில் குளு, குளு சீசன் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பரவலாக மழை

தமிழகத்தில் வடமாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. அதே சமயம் குமரி மாவட்டத்தில் போதிய மழை பெய்யவில்லை. கடந்த 2 நாட்களாக அவ்வப்போது வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழைக்கான அறிகுறி தென்பட்டது.

இந்தநிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவில், சாமிதோப்பு, கொட்டாரம் உள்ளிட்ட இடங்களில் மதியம் 1 மணிக்கு மழை பெய்தது. இதே போல மேற்கு மாவட்டத்தில் குலசேகரம், திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகள், மலையோரம் மற்றும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. மார்த்தாண்டம் பகுதிகளில் பலத்த மழையாக இருந்தது.

இந்த மழை காரணமாக சாலைகளில் சென்ற பொதுமக்கள் கையில் குடை பிடித்தபடி சென்றதை காணமுடிந்தது.

அணை நிலவரம்

இதற்கிடையே மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 806 கனஅடி தண்ணீரும், பெஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 124 கனஅடியும், முக்கடல் அணைக்கு வினாடிக்கு 9 கனஅடியும் தண்ணீர் வருகிறது.

அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 788 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடியும் தண்ணீர் பாசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

திற்பரப்பு அருவி

மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. மேலும் சாரல் மழையுடன் குளு, குளு சீசன் நிலவுகிறது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளிப்பதற்கு வசதியாக இங்கு குளுகுளு சீசன் நிலவுகிறது. வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலை மோதிவருகிறது.


Next Story