மாவட்டம் முழுவதும் பரவலாக மழை
மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த மழை அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 12 சென்டி மீட்டர் பதிவானது. ஏாி, குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருக்கோவிலூர்
பரவலாக மழை
மேற்குதிசை காற்றின் வேக மாறுபாட்டினால் மாநிலத்தின் பல இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு பலத்த மழை பெய்தது. குறிப்பாக திருக்கோவிலூர் பகுதியில் இரவு 10 மணியளவில் பெய்ய தொடங்கிய மழையானது விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் தாழ்வான பகுதியில் குளம்போல் தேங்கியது. மேலும் மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் இடையிடையே மின்தடை ஏற்பட்டது.
12 செ.மீ. பதிவு
இதேபோல் கள்ளக்குறிச்சி, மணலூர்பேட்டை, மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 120 மில்லி மீட்டர்(12 செ.மீ.) மழை பதிவானது. இதற்கு அடுத்து மணலூர்பேட்டை பகுதியில் 57 மில்லி மீட்டர், மூங்கில்துறைப்பட்டு பகுதியில் 49 மில்லி மீட்டர் மழை பதிவானது. இந்த மழையால் வெப்பம் தணிந்து பூமி குளிா்ந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நீர் மட்டம் உயர்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மழையால் ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து இருப்பதால் அவற்றின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதேபோல் தென் பெண்ணையாற்றிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.