ஆவின் பால் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது ஏன்..? அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்
அம்பத்தூரில் பால் பண்ணைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்ததாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் பால் பாக்கெட்டுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்தநிலையில் ஆவின் பால் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது ஏன் என்பது குறித்து தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரலாறு காணாத மழையால் பால் உற்பத்தியிலும், விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்த நிலையில் வாகன போக்குவரத்து மிகப்பெரிய சவாலாக இருந்தது.
சென்னை மாநகரை பொறுத்தவரையில் வெளி மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு சென்னை அம்பத்தூர், சோழிங்கநல்லூர், மாதவரம் பால் பண்ணைகளில் பதப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
தனியார் பால் நிறுவனங்களை பொறுத்த வரையில் அவர்களும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பால் கொண்டு வருவது வழக்கம். சென்னை பெருநகர் பகுதியில் கால்நடை இல்லாத காரணத்தால் பால் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இந்த சூழ்நிலையில் தான் 2 நாட்கள் ஆவின், தனியார் பால் விநியோகஸ்தர்கள் கூட பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பால் கொண்டு சேர்ப்பதில் மிகப்பெரிய சவால்களை சந்திக்க நேரிட்டது.
அதிலும் குறிப்பாக அம்பத்தூரில் பால் பண்ணைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தது. அதனால் போர்கால நடவடிக்கை மேற்கொண்டு பால் விநியோகத்தை சீரமைத்து தற்போது ஓரளவுக்கு பால் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அரசு தரப்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. பால் தேவையில் இடைவெளி ஏற்படாமல் தவிர்ப்பதற்கு பால் பவுடர் விநியோகமும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.
பல இடங்களில் பொதுமக்கள் பால் தொடர்ந்து கிடைக்காதோ என்ற அச்சத்தில் அதிகமான பால் வாங்கும் நிலை உள்ளது. அதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.