மாளிகைமேட்டில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது ஏன்?
மாளிகைமேட்டில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது ஏன்? என்பது பற்றிய விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கங்கை கொண்ட சோழபுரம் முதலாம் ராஜேந்திர சோழனால் சோழநாட்டின் தலைநகராக தோற்றுவிக்கப்பட்டது. அவரது ஆட்சியின்போது முடிகொண்டசோழன் திருமாளிகை, கங்கை கொண்ட சோழன் மாளிகை, சோழகேரளன் திருமாளிகை என்ற பெயர்களில் இங்கு பெரிய அரண்மனைகள் கட்டப்பட்டிருந்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
இதைத்தொடர்ந்தே தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் கங்கை கொண்ட சோழபுரத்தை அடுத்த மாளிகைமேடு பகுதிகளில் முதல்கட்ட அகழ்வாராய்ச்சி கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி நடந்தது. பழங்கால நகரமைப்பு மற்றும் மண்ணில் புதைந்துள்ள கட்டுமானங்களை வெளிக்கொணர்ந்து அரண்மனையின் வடிவமைப்பினை தெரிந்து கொள்வது இந்த அகழாய்வின் நோக்கமாகும். கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளின் சான்றுகளின் அடிப்படையில் மாளிகைமேட்டில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 2-வது கட்ட பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தார்.
இந்த அகழ்வாராய்ச்சிகளின்போது மொத்தம் 1,010 தொல் பொருட்கள் கிடைத்துள்ளன. புதையுண்ட செங்கல் கட்டுமானங்கள் இருந்ததற்கான சான்றுகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.