இங்கிலாந்தில் அமைக்கப்பட்டுள்ள பென்னிகுயிக் சிலை திறப்பு விழாவுக்கு ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்காதது ஏன்? அமைச்சர் பெரியசாமி பேட்டி
இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை திறந்த விழா நடைபெற்றதால் ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்கவில்லை என அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.
மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்த என்ஜினீயர் கர்னல் ஜான் பென்னிகுயிக், முல்லை பெரியாறு அணையை கட்டினார். அவர் பிறந்த இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரில் உள்ள பூங்காவில் தமிழக அரசு சார்பில் அவரது சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சிலையை கடந்த 10-ந்தேதி திறந்து வைப்பதற்காக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, 6-ந்தேதி லண்டன் சென்றார். ஆனால் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் இறந்ததால் சிலை திறப்பு விழா நடக்கவில்லை. இதையடுத்து அமைச்சர் பெரியசாமி லண்டனில் இருந்து சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிக் குயிக் நினைவு சின்னமாக அவர் பிறந்த இ்்ங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளியில் உள்ள பூங்காவில் அவருக்கு சிலை வைக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்து ராணி எலிசபெத் இறந்து விட்டதால் சி்லை திறப்பு விழா நடக்காமல், பொதுமக்கள் பார்த்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த விழாவில் தமிழகத்தில் இருந்து மக்கள் பிரதிநிதிகளான 5 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொள்ள வந்தனர். அவர்கள் தங்களது சொந்த செலவிலேயே வந்தனர். தமிழகத்தில் பென்னிகுயிக் சிலை திறப்பு விழா நடந்திருந்தால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுத்திருப்போம். ஆனால் இங்கிலாந்தில் நடைபெற்றதால் அழைக்கவில்லை. தங்க தமிழ்ச்செல்வனும் அவரது சொந்த செலவில்தான் வந்தார். யாரையும் அரசு செலவில் அழைத்து செல்லவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.