மருத்துவ மேற்படிப்பு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரு கலந்தாய்வு நடத்தியது ஏன்? - ஐகோர்ட் கேள்வி
மருத்துவ மேற்படிப்புக்கான நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரு கலந்தாய்வு நடத்தியது குறித்து சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,
2020-21 கல்வியாண்டில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் கலந்தாய்வு இன்றி மாணவர் சேர்க்கை நடைபெற்றதாகக் கூறி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டனர்.
நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படாததற்கு மருத்துவ மேற்படிப்பு தேர்வுக்குழுவின் அப்போதைய செயலாளர் செல்வராஜன் தான் காரணம் என சி.பி.சி.ஐ.டி. குற்றம் சாட்டியது. இதையடுத்து முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து செல்வராஜன் ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஏழு கலந்தாய்வுகள் நடத்திய நிலையில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரு கலந்தாய்வு நடத்தியது ஏன். இதன் மூலம் தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக தேர்வுக்குழு செயலாளர் செயல்பட்டுள்ளார் என்று தெரிவித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.