கோர்ட்டு உத்தரவிட்டும் சாலையை சீரமைக்காதது ஏன்?- ஊரக வளர்ச்சித்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி


கோர்ட்டு உத்தரவிட்டும் சாலையை  சீரமைக்காதது ஏன்?- ஊரக வளர்ச்சித்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x

கோர்ட்டு உத்தரவிட்டும் சாலையை சீரமைக்காதது ஏன் என்றும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை


கோர்ட்டு உத்தரவிட்டும் சாலையை சீரமைக்காதது ஏன் என்றும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கால்வாய்களில் ஆக்கிரமிப்பு

மதுரை அய்யர்பங்களாவைச் சேர்ந்த கோவிந்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த பல ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றி வருகிறேன். மதுரை ஐகோர்ட்டில் சிறப்பு அரசு வக்கீலாக பணியாற்றியுள்ளேன். எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட வேளாங்குளம். மழையை நம்பித்தான் இப்பகுதி விவசாயிகள் உள்ளனர்.

இந்த நிலையில் வேளாங்குளம் கண்மாய்க்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் அனைத்தும் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் இந்த கண்மாய்க்கு தண்ணீர் வருவது தடைபட்டுள்ளது. சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் அவை அகற்றப்படவில்லை.

இதே போல சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட வேளாங்குளம் வழியாக இந்த பகுதியில் உள்ள வேலூர் செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளது. இதை சீரமைக்க பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. இன்னும் சில மாதங்களில் வேளாங்குளம் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது.

நடவடிக்கை இல்லை

எனவே இங்குள்ள சாலையை சீரமைத்து போக்குவரத்திற்கு வசதியாக வசதி செய்து தரும்படியும், கண்மாய் மற்றும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், வனத்துறை செயலாளர், சிவகங்கை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியிருந்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எங்கள் மனுவின் அடிப்படையில் வேளாங்குளம் கண்மாய் நீர்வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

நீதிபதிகள் கேள்வி

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் சி.எம்.ஆறுமுகம் ஆஜராகி, கோர்ட்டு உத்தரவிட்டும், இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

பின்னர் நீதிபதிகள், சாலையை சீரமைக்க கோர்ட்டு உத்தரவிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு கேள்வி எழுப்பினர்.

பின்னர் இது தொடர்பாக மனுதாரர் மனுவின் அடிப்படையில் வேளாங்குளம் கண்மாய் நீர்வரத்து கால்வாய்களை தூர்வாருவது, சாலை சீரமைக்கும் பணிகளை அதிகாரிகள் 12 வாரத்தில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story