பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில் முதல்-அமைச்சர் மவுனம் காப்பது ஏன்?


பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில் முதல்-அமைச்சர் மவுனம் காப்பது ஏன்?
x
தினத்தந்தி 3 Oct 2022 1:15 AM IST (Updated: 3 Oct 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமாகிவிட்டது என்றும், பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனமாக இருப்பது ஏன் என்றும் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

திண்டுக்கல்

காந்தி ஜெயந்தி


திண்டுக்கல்லில், தே.மு.தி.க. கட்சி கொடியேற்று விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தே.மு.தி.க. பிரமுகர் இல்ல திருமண விழா ஆகியவை நேற்று நடந்தது. இதில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார். அதையடுத்து மாநகராட்சி சாலையில் உள்ள காமராஜர் சிலை, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்திசிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தே.மு.தி.க.வை பொறுத்தவரை மது இல்லாத, கஞ்சா போதை இல்லாத, குண்டு வீச்சு சம்பவம் நடக்காத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே நோக்கம். இதுகுறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் தே.மு.தி.க. நிர்வாகிகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் உறுதிமொழியும் எடுத்து வருகின்றனர்.


சட்டம்-ஒழுங்கு மோசம்


தமிழகத்தில் கஞ்சா, மது விற்பனை தற்போது அதிகமாகிவிட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகும் நிலை உள்ளது. இதுஒருபுறம் இருக்க தற்போது பெட்ரோல் குண்டு வீச்சு கலாசாரம் தமிழகத்தில் நடந்து வருகிறது. இதனை தே.மு.தி.க. வன்மையாக கண்டிக்கிறது. பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் இன்றி அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. சட்டம், ஒழுங்கு இலாகாவை தன் வசம் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவர் இதுவரை ஏன் மவுனம் காக்கிறார் என்பது தெரியவில்லை. மக்களுக்கு அவர் அவசியம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.


தற்போதைய தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு மாதிரியாகவும், ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மாதிரியும் மக்களிடம் பேசுகின்றனர். அமைச்சர்களின் இந்த இரட்டை நிலைப்பாடு பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அடுத்து வரும் தேர்தலில் கூட்டணியா? அல்லது தனித்து போட்டியா? என்பதை இப்போது முடிவு செய்ய முடியாது. தே.மு.தி.க. தற்போது யாருடனும் கூட்டணியில் இல்லை.


இவ்வாறு அவர் கூறினார்.



Next Story