முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து விடுவிக்க தயங்குவது ஏன்?-எடப்பாடி பழனிசாமி கேள்வி
கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து விடுவிப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன்? தயங்குகிறார் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேச்சேரி:
கொடியேற்று விழா
சேலம் மாவட்டம் நங்கவள்ளி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பல்வேறு ஊராட்சிகளில் அ.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது. விழாவில் முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சின்ன சோரகை, பெரிய சோரகை, வீரக்கல், சாணாரப்பட்டி ஊராட்சிகளில் அ.தி.மு.க. கொடியேற்றினார்.
இதையடுத்து நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- சின்ன சோரகை நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி கட்டிடம் கட்டப்பட்டது. பெரிய சோரகை ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை, வீரக்கல் ஊராட்சியில் அங்கன்வாடி மையம், ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட்டன.
தயக்கம் காட்டுகிறார்
மேட்டூர் அணையை அ.தி.மு.க. அரசு தான் தூர்வாரி விவசாயிகளுக்கு வண்டல் மண் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தது. அ.தி.மு.க. தொடங்கிய திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்துகிறது. இது கண்டிக்கத்தக்கதது. தி.மு.க. அரசு பல பேருக்கு முதியோர் உதவித்தொகையை நிறுத்திவிட்டது. அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் விடுபட்ட அனைத்து முதியோர்களுக்கும் உதவித்தொகை கிடைக்கவும், தமிழகம் முழுவதும் ஏழை முதியோர்களை கண்டறிந்து உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இருகட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்-அமைச்சர் காப்பாற்ற துடிக்கிறார். இதற்கு முன்பு 3 அமைச்சர்கள் குறித்து குற்றச்சாட்டு எழுந்தபோது பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால் செந்தில் பாலாஜியை ஏன்? பதவியில் இருந்து விடுவிப்பதற்கு முதல்-அமைச்சர் தயக்கம் காட்டுகிறார். ஏனென்றால் அவர் வாயை திறந்தால் ஊழல் குற்றச்சாட்டு வெளிவந்துவிடும். ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்பதால் கைதியாக அறிவிக்கப்பட்டவரை காப்பாற்ற நினைக்கிறார்.
ரேஷன் கடைகளில் முறைகேடு
செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு சென்ற போது முதல்-அமைச்சர் மற்றும் குடும்பத்தினர் நேரில் சென்று நலம் விசாரிக்கின்றனர். தற்போது ரேஷன் கடையிலும் முறைகேடுகள் நடக்கிறது. கவர்ச்சிகரமான அறிவிப்புகளை கொடுத்து தி.மு.க. வெற்றி பெற்றுவிட்டனர். ஊழலுக்கு சம்மட்டி அடி கொடுக்க வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.