இறந்தால் அடக்கம் செய்ய யார் இருக்கார்கள்? ஒற்றை கேள்வி; கல்லறை கட்டிவைத்து உயிரிழந்த மூதாட்டி - மனதை உறையவைக்கும் நிகழ்வு...!


இறந்தால் அடக்கம் செய்ய யார் இருக்கார்கள்? ஒற்றை கேள்வி; கல்லறை கட்டிவைத்து உயிரிழந்த மூதாட்டி - மனதை உறையவைக்கும் நிகழ்வு...!
x
தினத்தந்தி 16 Jun 2022 5:27 PM IST (Updated: 16 Jun 2022 5:43 PM IST)
t-max-icont-min-icon

வேலைக்கு செல்லும் இடங்களில் உடன் பணி புரிபவர்கள் நீ இறந்தால் உன்னை அடக்கம் செய்ய யார் இருக்கார்? என கேட்டு கிண்டல் அடித்துள்ளனர்.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பல்லுளி பகுதியை சேர்ந்தவர் ரோசி (வயது70). இவருக்கு திருமணமாகமல் தனிமையில் வசித்து வந்தார்.

வீட்டு வேலைகள் செய்து வந்த மூதாட்டி ரோசி, பின்னர் 100 நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து வேலை பார்த்து வந்தார். இவர் ஒருநாள் கூடவிடுமுறை எடுக்காமல் வேலைக்கு வந்துள்ளார். இதனால் இவரை ஊராட்சி மன்ற தலைவர் பொன்னாடை வழங்கி கவுரவித்து உள்ளார்.

இந்த நிலையில் மூதாட்டி ரோசி வேலைக்கு செல்லும் இடங்களில் உடன் பணி புரிபவர்கள் நீ இறந்தால் உன்னை அடக்கம் செய்ய யார் இருக்கார் என கேட்டு கிண்டல் அடித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரோசி, தான் இறந்தால் தன்னை அடக்கம் செய்ய வீட்டின் அருகே கல்லறை ஒன்றை கட்டி வைத்து உள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ரோசிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இவரை கவனிக்க யாரும் இல்லாததால் வீட்டிலேயே இறந்து கிடந்துள்ளார். ஒரு வாரமாக வீட்டை விட்டு மூதாட்டி ரோசி வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது அக்காள் மகன் விஜயன் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது அவர் உடல் அழுகிய நிலையில் பரிதாபமாக இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்த தகவலை கொல்லங்கோடு போலீசாருக்கு அவர் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மூதாட்டி ரோசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டு அவர் கட்டி வைத்திருந்த கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story