மின்கம்பம் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவர் பலி -உறவினர்கள் சாலை மறியல்


மின்கம்பம் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவர் பலி -உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 July 2023 3:47 PM IST (Updated: 13 July 2023 4:35 PM IST)
t-max-icont-min-icon

மின்கம்பத்தின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவன் பலியானார். அவரது உறவினர்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு நிலவியது.

திருவள்ளூர்

மீஞ்சூர்

மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுப்பேடு பெருமாள் கோவில் தெருவில் வசிப்பவர் தேவி (வயது 40). இவருக்கு முகேஷ் (16) மற்றும் ரூபேஷ் (14) என்ற இரு மகன்கள் இருந்தனர். இதில் ரூபேஷ் மீஞ்சூர் ஆதிதிராவிட நலப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை மாணவன் ரூபேஷ் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மின் கம்பத்தின் மின்வயர் அவர் மீது பட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து மாணவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மின்கம்பத்தை சரியாக பராமரிக்காததால் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் உயிரிழந்ததாக புகார் கூறி மீஞ்சூர் வழியாக செல்லும் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். தகவல் அறிந்த பொன்னேரி தாசில்தார் செல்வகுமார், மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றிஅரசு, பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை அடுத்து அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story