எந்தெந்த இடங்களில் குப்பை கொட்டக்கூடாது? சென்னை மாநகராட்சி கணக்கெடுப்பு


எந்தெந்த இடங்களில் குப்பை கொட்டக்கூடாது? சென்னை மாநகராட்சி கணக்கெடுப்பு
x

சென்னையில் எந்தெந்த இடங்களில் குப்பை கொட்டக்கூடாது என்று சென்னை மாநகராட்சி கணக்கெடுப்பு நடத்தி உள்ளது.

சென்னை

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சராசரியாக 5 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. திடக்கழிவுகளை கையாள சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரித்து குப்பை வண்டிகள் மூலம் பெற்று வருகின்றனர்.

இதேபோல, தெருக்களின் முக்கிய பகுதிகளில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் லாரிகள் மூலம் குப்பை சேகரிப்பு நிலையங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது. ஆனால், பொதுமக்கள் திடக்கழிவுகளை சாலையில் கொட்டி வருகின்றனர். குறிப்பாக, தெரு முனைகளிலும், நடைபாதைகளுக்கு அருகிலும், நீர்நிலைகளிலும், ஆஸ்பத்திரி அருகேயும் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.

பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், பொது இடங்களில் குப்பை கொட்டுவது குறையவில்லை. எனவே, பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் சென்னையில் முதல் கட்டமாக 18 சாலைகளை குப்பை இல்லாத சாலைகளாக மாற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து உள்ளது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் எந்தெந்த இடங்களில் குப்பை கொட்ட தடை விதிக்கலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுத்து வந்தனர். அதன்படி 188 இடங்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். 188 இடங்களில் பொதுமக்கள் குப்பை கொட்ட தடை விதிக்கப்பட இருக்கிறது. அதாவது, தெருமுனைகள், ஆஸ்பத்திரி, மார்க்கெட் பகுதி, குப்பை தொட்டி அருகில், பள்ளி, கல்லூரி அருகில் என இந்த இடங்கள் கணக்கெடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குப்பை கொட்டு நபர்கள் யார்? என்று தீவிரமாக கண்காணிக்கப்படும்.

ஒரே நபர் அடிக்கடி குப்பை கொட்டுவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இரவு நேரங்களில் பணியாற்றும் 3 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் இந்த பணியில் இணைந்து செயல்படுவார்கள். அவர்களும் பொதுமக்களுக்கு தங்களின் அறிவுரைகளை வழங்குவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story