ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட குழந்தைகள் விளையாட்டு மைதானம் எங்கே?


ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட குழந்தைகள் விளையாட்டு மைதானம் எங்கே?
x

திருவண்ணாமலையில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்டு உள்ள தோட்டக்கலை பூங்காவில் ரூ.10 லட்சத்தில் அமைத்ததாக கூறப்பட்ட குழந்தைகள் விளையாட்டு மைதானம் இல்லாததால் ஆய்வின்போது கலெக்டர் முருகேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

திருவண்ணாமலை


திருவண்ணாமலையில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்டு உள்ள தோட்டக்கலை பூங்காவில் ரூ.10 லட்சத்தில் அமைத்ததாக கூறப்பட்ட குழந்தைகள் விளையாட்டு மைதானம் இல்லாததால் ஆய்வின்போது கலெக்டர் முருகேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

தோட்டக்கலை பூங்கா

திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள கிரிவலப்பாதையில் தோட்டக்கலைத் துறை சார்பில் 9 ஏக்கர் பரப்பளவில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 2018-19-ம் நிதியாண்டில் அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்து உள்ளது.

இருப்பினும் இந்த பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.

இந்த அரசு தோட்டக்கலை பூங்காவை இன்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் பூங்காவில் ரூ.1 கோடியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் விவரம் மற்றும் என்னென்ன பணிகள் முடிவடைந்துள்ளது, நிலுவையிலுள்ள பணிகள் என்னவென்று தோட்டக்கலைத் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் ரூ.1 கோடியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் பட்டியலில் உள்ளவற்றை ஒவ்வொன்றாக பார்வையிட்டார்.

கலெக்டர் அதிர்ச்சி

அப்போது ரூ.10 லட்சத்தில் குழந்தைகள் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் குழந்தைகள் விளையாட்டு மைதானம் அமைக்கப்படாததை கண்டு கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே ரூ.10 லட்சத்திற்கான குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களை எங்கே என்று தோட்டக்கலை அலுவலரிடம் கேள்வி எழுப்பினார்.

பின்னர் அவர் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பி நிறைவடையாமல் உள்ள பணிகளை முடித்து தர அறிவுறுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து பூங்காவை பார்வையிட்ட அவர் பராமரிப்பு பணிகள் முறையாக இல்லை.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை இயக்குனரிடம் முழுவிவரங்களை கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் தோட்டக்கலை பூங்காவை சுற்றி வேலி அமைக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள் மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் அமைக்க வேண்டும்.

நடைபாதையை சீர் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அரசு கலைக்கல்லூரி

தொடர்ந்து அவர் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் நாளை (சனிக்கிழமை) காலை கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அன்பரசு, நகராட்சி செயற்பொறியாளர் நீலேஸ்வரன், நலப்பணிகள் (இணை இயக்குனர்) பாபுஜி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செல்வகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story