வேலூர் புதிய பஸ் நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வருவது எப்போது? மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.- தி.மு.க.வினரிடையே வாக்குவாதம்


வேலூர் புதிய பஸ் நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வருவது எப்போது? மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.- தி.மு.க.வினரிடையே வாக்குவாதம்
x

வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் வேலூர் புதிய பஸ் நிலையம் முழுமையாக எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று கேள்வி எழுப்பப்பட்டதால் அ.தி.மு.க.- தி.மு.க.வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வேலூர்

வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் வேலூர் புதிய பஸ் நிலையம் முழுமையாக எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று கேள்வி எழுப்பப்பட்டதால் அ.தி.மு.க.- தி.மு.க.வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மாநகராட்சி கூட்டம்

வேலூர் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. மேயர் சுஜாதா தலைமை தாங்கினார். துணை மேயர் சுனில்குமார் முன்னிலை வகித்தார். கமிஷனர் அசோக்குமார் வரவேற்றார்.

முதல் தீர்மானமாக வேலூர் மாநகராட்சியின் அலுவலக மைய பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு மார்பளவு வெண்கல சிலை அமைக்க வேண்டும் என நிறைவேற்றப்பட்டது. மொத்தம் 225 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு கவுன்சிலரும் வார்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து பேசியதாவது:-

கணேஷ்சங்கர்:- வேலூர் புதிய பஸ் நிலையத்தில் சிறிய அளவிலான கடையின் வாடகை கூட மிக அதிகமாக உள்ளது. மின் கட்டணம், ஜி.எஸ்.டி. சேர்த்தால் அதன் தொகை இன்னும் அதிகமாகும்.

இவ்வளவு தொகை கொடுத்து கடை எடுத்தால் அதில் போதிய வருமானம் கிடைக்குமா? என்பது கேள்வியாக உள்ளது. தொடர்ந்து வாடகையை அவர்களால் கட்டமுடியாமல் போகலாம். கடையை வாடகைக்கு எடுக்கும் முன்பு பல லட்சம் ரூபாய் வைப்புத்தொகை அல்லது பல லட்சம் மதிப்பிலான சொத்து மதிப்பு சான்றிதழ் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது.

இதனால் ஏழை, எளிய மக்கள் கடையை வாடகைக்கு எடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே வாடகையை குறைக்க வழிவகை செய்ய வேண்டும்.

சுமதிமனோகரன்:- கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய மண்டலத்துக்கு ஒரு பொக்லைன் எந்திரம், கால்வாய் தூர்வாரும் எந்திரம் வழங்கப்பட வேண்டும். தெருக்களில் பல இடங்களில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அதை தடுக்க வேண்டும்.

பாபிகதிரவன்:- ஓட்டேரி ஏரியில் குப்பைகள் கொட்டப்படுவதால் ஏரி நீர் மாசுபடுகிறது. எனவே பிளாஸ்டிக் குப்பைகளை தனியாக கொட்டப்பட்டு அவற்றை வேறு முறையில் அகற்றப்பட வேண்டும். குப்பை தொட்டி இல்லாத இடத்தில் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

கைது நடவடிக்கை

மம்தா: வேலூர் ஆற்காடு சாலை காகிதப்பட்டறையில் 7 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அங்கு மது குடிக்க வருவோர், வாகனங்கள் நிறுத்துவது ஆகியவற்றால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையில் செல்லும் பெண்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

சேகர்:- எனது வார்டில் நாய்கள் தொல்லையும், பன்றிகள் தொல்லையும் அதிகமாக உள்ளன. அதை கட்டுப்படுத்த வேண்டும்.

கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு மேயர் சுஜாதா பதிலளித்து பேசியதாவது:-

நாய்களுக்கான கருத்தடை மையம் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி பகுதியில் பன்றிகள் வளர்த்தால் இனி வரும் காலங்களில் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் கடைகள் தொடர்பாக கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க ரூ.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கப்படும். மின் விளக்குகள் அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்க உறுதி செய்யப்படும். போக்குவரத்துக்கு இடையூறாக செல்போன் நிறுவன கம்பங்கள் வைத்தால் உடனடியாக அகற்றப்படும். 3-ம் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் கொண்ட இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. அனைத்து கால்வாய்களும் தூர்வார துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

25 டன் குப்பைகள்

கமிஷனர் அசோக்குமார்:-வேலூர் மாநகராட்சியில் அனைத்து மண்டலத்துக்கும் கால்வாய் தூர்வார தனித்தனியாக பொக்லைன் எந்திரம் வழங்கப்பட உள்ளது. மேலும் சிறிய தெருக்களில் சென்று கால்வாயை சுத்தம் செய்யவும் எந்திரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகள் பிரிக்கப்படுகிறது. அதில் விற்க முடியாத குப்பைகள் அரியலூரில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது. இதனால் அதிக செலவீனம் ஏற்படுகிறது. எனவே அதை தடுக்க நவீன எரியூட்டி எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. அந்த எந்திரங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு மாசுகட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க வேண்டும். அவ்வாறு அனுமதி கிடைக்கப்பெற்றால் தினமும் விற்கப்படாத 25 டன் குப்பைகள் அகற்றப்படும். இதன் மூலம் குப்பை பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

பரபரப்பு

கூட்டத்தில், வேலூர் புதிய பஸ் நிலையம் எப்போது திறக்கப்படும் என்று கவுன்சிலர் எழிலரசன் கேள்வி எழுப்பினார். அப்போது துணை மேயர் சுனில்குமார் பஸ் நிலைய கட்டுமான ஒப்பந்தம் கடந்த ஆட்சியில் விடப்பட்டது. கட்டுமானம் தவறாக நடந்துள்ளது. எனவே ஒவ்வொன்றையும் சரிசெய்து வருகிறோம். விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார்.

அப்போது அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர் புஷ்பலதா வார்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பேசும்போது அவருக்கும்,மேயருக்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. மேயர் கூறுகையில், 1-வது மண்டலத்தை புறக்கணிக்கவில்லை. அதிகபட்சமாக 1-வது மண்டலத்துக்கு தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.


Next Story