புதிய சமுதாயக்கூடம் கட்டப்படுவது எப்போது?
புதிய சமுதாயக்கூடம் கட்டப்படுவது எப்போது?
திட்டச்சேரியில் 3 மாதங்களுக்கு முன்பு சமுதாயக்கூடம் இடிக்கப்பட்டும் இதுவரை புதி்தாக கட்டவில்லை. எனவே திட்டச்சேரியில் புதிய சமுதாயக்கூடம் கட்டப்படுவது எப்போது? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
சமுதாயக்கூடம் இடிப்பு
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு வெள்ளத்திடலில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெரும்பாலும் குடிசை வீடுகளாகவே உள்ளது. இங்கு வசிக்கும் மக்களின் நலன்கருதி சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயக்கூடம் ஒன்று அமைக்கப்பட்டது.
இதை அப்பகுதி மக்கள் தங்களது பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். தற்போது 15 ஆண்டுகளை கடந்த நிலையில் பேரூராட்சி சார்பில் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த சமுதாயக்கட்டிடம் இடிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த ராஜ்குமார் கூறுகையில்:-
பாதுகாப்பு அறை
மழை வெள்ள காலங்களில் நாங்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை சுற்றி தண்ணீர் தேங்கிநிற்கும். அதேசமயம் புயல்காற்று வீசும் நேரங்களில் எங்கள்பகுதி வீடுகள் சேதம் அடையும்.அப்போது எங்களுக்கு பாதுகாப்பு அறையாக செயல்பட்டு வந்தது இந்த சமுதாயக்கூடம் தான்.
தற்போது அந்த சமுதாயக்கூட கட்டிடம் கட்டி 15 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில், அதே இடத்தில் 2 கழிவறைகளுடன் கூடிய புதிய சமுதாயக்கூடம் கட்டித்தரப்படும் எனக்கூறி திட்டச்சேரி பேரூராட்சி சார்பில் இடிக்கப்பட்டது. கட்டிடம் இடிக்கப்பட்டு 3 மாதங்களை கடந்த நிலையில் இன்று வரை தரைத்தளம் கூட அமைக்கப்படவில்லை.
நடவடிக்கை
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இடிக்கப்பட்ட இடத்தில் உடனடியாக புதிய சமுதாயக்கூடம் கட்டும் பணிகளை தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.