புதிய தாலுகா அலுவலகம் திறப்பு விழா எப்போது?
வத்திராயிருப்பு புதிய தாலுகா அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு புதிய தாலுகா அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாலுகா அலுவலகம்
வத்திராயிருப்பு தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டது. இந்த தாலுகா 4 பேரூராட்சிகளையும், 27 ஊராட்சிகளையும் உள்ளடக்கியது. வத்திராயிருப்பு தாலுகா கட்டிடம் தற்போது வரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
வத்திராயிருப்பு தனி தாலுகாவாக உருவாக்கப்பட்ட ஓராண்டிற்குள் புதிய தாலுகா அலுவலக கட்டிட பணி தொடங்கப்பட்டது. இந்த பணியானது 2 ஆண்டுகளுக்கு மேலாக தற்போது வரை நடைபெற்று கொண்டிருக்கிறது. தற்காலிகமாக ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் இயங்கி வரும் தாலுகா அலுவலகம் ஆனது போதிய இடவசதி இல்லாததால் பொதுமக்களின் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதாகவும் மழைக்காலங்களில் ஆங்காங்கே மழைநீர் கட்டிடத்திற்குள் இறங்கி ஆவணங்கள் மழை நீரில் நனையும் சூழ்நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கட்டிட பணிகள்
மின்தடை நேரங்களில் ஆன்லைன் சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் புதிய தாலுகா அலுவலக கட்டிட பணியானது முடிந்து சிறு, சிறு பணிகள் மட்டும் நடைபெற்று கொண்டு இருக்கிறது.
எனவே புதிய தாலுகா அலுவலக கட்டிட பணிகளை விரைந்து முடிந்து மக்களின் பயன்பாட்டிற்கு அலுவலகத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.