வாட்ஸ்-அப்பில் ஹேக்கிங் வைரஸ் பரவல்


வாட்ஸ்-அப்பில் ஹேக்கிங் வைரஸ் பரவல்
x

வாட்ஸ்-அப்பில் ஆண்டு விழா, அப்டேட் லிங்குகளை அனுப்பி ஹேக்கிங் வைரஸ் பரவி வருவதாகவும், பொதுமக்கள் உஷாராக இருக்கும்படியும் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

புதுக்கோட்டை

ஆன்லைன் மோசடி

சமூக வலைத்தளமான வாட்ஸ்-அப் பயன்பாடு இன்றைய காலத்தில் அதிகரித்து விட்டது. ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்-அப் செயலியும் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது. இந்த நிலையில் வாட்ஸ்-அப்பில் லிங்குகளை அனுப்பி அதன் மூலம் செல்போன்களில் உள்ள விவரங்கள், தகவல்கள் திருடப்பட்டு மோசடி நடைபெறும் சம்பவமும் அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்பு, வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடன், பரிசு பொருட்கள் விழுந்துள்ளது என கூறி பல்வேறு வகைகளில் ஆன்லைனில் மோசடியில் மர்மநபர்கள் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் கடந்த ஓரிரு தினங்களாக வாட்ஸ்-அப்பில் ஒரு மோட்டார் நிறுவனத்தின் ஆண்டு விழா என்ற லிங்க் பரவலாக பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த லிங்கில் உள் சென்றால் அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு, இந்த லிங்கை பிறருக்கும் பகிர்ந்தால் பரிசு என கூறுவதால் இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

ஹேக்கர்ஸ் வசம் தகவல்கள்

இதேபோல வாட்ஸ்-அப் அப்டேட் பிங்க் வாட்ஸ்-அப் என்ற லிங்கும் பரவி வருகிறது. இந்த 2 லிங்குகளும் போலியானவை எனவும், ஹேக்கிங் வைரஸ் லிங்குகள் எனவும் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இந்த லிங்குகளை யாரும் கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு கிளிக் செய்தால் அவரது வாட்ஸ்-அப் முழுவதும் ஹேக்கர்களின் வசம் சென்று தானாக மெசேஜ் பதிவாகிறது.

இதனால் உங்களின் வங்கி கணக்கு மற்றும் தனிப்பட்ட தகவல்களும் திருடப்படலாம். எனவே யாரும் இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். பொதுமக்கள் உஷாராக இருக்கும்படி புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் சைபர் கிரைம் தொடர்பாக உதவி மையத்தை 1930 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


Next Story