ஈபிஎஸ் அணியுடன் பாஜக கூட்டணி வைத்தால் உங்கள் நிலைப்பாடு என்ன? - ஓ.பன்னீர் செல்வம் பதில்


ஈபிஎஸ் அணியுடன் பாஜக கூட்டணி வைத்தால் உங்கள் நிலைப்பாடு என்ன? - ஓ.பன்னீர் செல்வம் பதில்
x

Image Courtesy: PTI

பாஜக இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் ஆதரவு தருவோம் என்று கூறியுள்ளோம் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா சமீபத்தில் காலமானார். இதையடுத்து, அந்த தொகுதி காலியாக இருந்த நிலையில் அடுத்த மாதம் 27-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. இடைத்தேர்தலில் பதிவாகும் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் களம் தற்போது சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிருகிறார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு கட்சிகளிடம் ஆதரவு கேட்டு வருகின்றனர். பாஜகவிடமும் அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆதரவு கேட்டனர்.

அதேவேளை கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக தற்போது இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால், எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக. ஏற்கனவே அக்கட்சியில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிப் பெற்று அமைச்சரான பலர் இருக்கின்றனர். பண பலம், படை பலம், அதிகார பலம் கொண்ட திமுகவை எதிர்த்து நிற்கக்கூடிய வேட்பாளர் அங்கு நிற்க வேண்டும். அங்கு நிற்கக்கூடிய வேட்பாளருக்கு எல்லாவிதமான ஒத்துழைப்பும் வழங்க வேண்டியது எங்களது கடமை என்றார்.

ஆனால், ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலும் இடைத்தேர்தலில் வேட்பாளரை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுவோம் என ஓபிஎஸ் ஏற்கனவே கூறியுள்ளார். மேலும், பாஜக போட்டியிட்டால் நாங்கள் விட்டு தருவோம்' என்றார்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் புதியநீதிக்கட்சி தலைவர் சண்முகத்தை சந்தித்து இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டார். அதன்பின் செய்தியாளர்களை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்றும், இன்றைக்கு இந்தியாவை வல்லரசாக ஆக்கிக்காட்டுகின்ற தீவிர முயற்சியில் பிரதமர் மோடி 10 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை நிறைவு செய்துள்ள நிலையில் பாஜக இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் அதிமுக ஆதரவு அளிக்கும் என்ற எங்களின் நிலைப்பாட்டை நான் தெரிவித்திருந்தேன். அந்த நிலைப்பாட்டோடு புதிய நீதிகட்சி தலைவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து அரசியல் சூழ்நிலை குறித்து பேசினோம்.

இடைத்தேர்தலில் போட்டியிடுவோம் என்று நாங்கள் கூறிவிட்டோம். பாஜக இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் ஆதரவு தருவோம் என்று கூறியுள்ளோம்.

ஈபிஎஸ் அணியுடன் பாஜக கூட்டணி வைத்தால் உங்கள் நிலைப்பாடு என்ன? என்று ஓபிஎஸ் இடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது' என்றார்.

இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வாய்ப்பு உள்ளதா? என்று ஓபிஎஸ் இடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், பொதுவாகவே தேர்தல் வேட்புமனு முடிவடைவதற்கு முன்னால் பல்வேறு கட்சிகள் நிலைப்பாடே மாறுகின்ற சூழ்நிலைக்கு ஏற்படும். அந்த சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் தங்கள் நடைமுறையை மாற்றிக்கொள்வார்கள் என்பது தான் கடந்த காலத்தின் உண்மை.

எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் கூறிவிட்டோம். மற்ற கட்சியின் நிலைப்பாட்டை நாங்கள் எப்படி கூற முடியும்.

இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடுவோம்.

பிரிந்து இருக்கின்ற அதிமுகவின் அத்தனை பிரிவுகளும் ஒன்றுசேரவேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு அதிமுக தொண்டர்கள் நிலைப்பாடு.

அதிமுக ஒன்றுபட்டு தேர்தல் களத்தில் நிற்க வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார். நாங்களும் விரும்புகிறோம்.

(அதிமுகவின்) இரு அணிகளும் இணைய வேண்டும் என்று பிரதமர் மோடி உங்களிடம் எப்போது கூறினார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், எங்களை சந்திக்கும்போதெல்லாம் அவர் தங்களுடைய விருப்பத்தை கூறிக்கொண்டுதான் இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமியை நீங்கள் நேரில் சந்திப்பீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், ஏற்கனவே அவர்களது நிலைப்பாட்டை உலகமகா அரசியல் வித்தகர் ஜெயக்குமார் கூறிக்கொண்டே இருக்கிறார்' என்றார்.





Next Story