நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொன்னாலும், எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர்-செல்லூர் ராஜூ பேட்டி


நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொன்னாலும், எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர்-செல்லூர் ராஜூ பேட்டி
x

நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொன்னாலும், எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர்-செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை

நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொன்னாலும், எடப்பாடி பழனிசாமி தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. கூறினார்.

கோரிக்கை மனு

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் தீர்க்கப்படாமல் உள்ள 10 கோரிக்கைகளை எம்.எல்.ஏ.க்கள் தயார் செய்து மாவட்ட கலெக்டரிடம் வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டு உள்ளார். அதன்படி மதுரை மேற்கு தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய 10 கோரிக்கைகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, கலெக்டர் அனிஷ்சேகரிடம் நேற்று வழங்கினார்.

அதில் சோலையழகுபுரத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் மக்களுக்கு பத்திரம் பட்டா வழங்க வேண்டும். விராட்டிபத்து, கோச்சடை, பொன்மேனி, பெத்தானியாபுரம், பைபாஸ் சாலை, அரசரடி ஆகிய இடங்களில் புதிய பாதாள சாக்கடை அமைக்க வேண்டும். பெத்தானியாபுரத்தில் உயர்மின் வயர் செல்வதை உயரமாக அமைத்து தர வேண்டும். கோச்சடை கண்மாயை தூர்வாரி சுற்றுப்புறத்தில் பூங்கா அமைக்க வேண்டும். விளாங்குடியில் உள்ள 3 ஏக்கர் அரசு நிலத்தில் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். சம்மட்டிபுரம் முனியாண்டி கோவில் ஊருணியை தூர்வார வேண்டும். பரவை பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பரவையும், துவரிமானையும் இணைக்கும் வகையில் மேம்பால இணைப்பு சாலையை உடனடியாக அமைக்க வேண்டும். பரவை வைகையாற்று பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும். மேலமாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட புல்லூத்தில் இயற்கையான அருவி பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றி தார்சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை பெற்று கொண்ட கலெக்டர் அனிஷ் சேகர், முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தார்.

கோர்ட்டு உத்தரவு

அதன்பின் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த கோரிக்கைகள் நிறைவேறும் என்று நம்புகிறேன். மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவி திட்டத்தின் கீழ் ஒரு பெண்ணுக்கு தாலிக்கு தங்கம், ரூ.50 ஆயிரம் நிதி உதவி என ரூ.1 லட்சம் வரை கிடைத்தது. ஆனால் அந்த திட்டத்திற்கு மூடுவிழா நடத்தப்பட்டு, தற்போது புதுமைப் பெண் திட்டத்தை தி.மு.க. அரசு தொடங்கி உள்ளது.

ஆனால் இந்த திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மட்டும் ரூ.36 ஆயிரம் தான் கிடைக்கிறது. அதுவும் மதுரை மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் வெறும் 538 மாணவிகள் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது குறைந்த எண்ணிக்கை. எனவே தகுதியான மாணவிகள் அனைவருக்கும் இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்க வேண்டும். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதல்-அமைச்சர். ஒரு கட்சியை, கோர்ட்டு உத்தரவுப்படி நடத்த முடியாது. நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொன்னாலும், எடப்பாடி பழனிசாமி தான் பொதுச்செயலாளர் என்று தொண்டர்கள் முடிவு செய்து விட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story