பதிவுத்துறை மூலம் ரூ.25 ஆயிரத்து 567 கோடி வருவாய் ஈட்ட மேற்கொள்ள வேண்டியது என்ன? அமைச்சர் ஆலோசனை
பதிவுத்துறை மூலம் ரூ.25 ஆயிரத்து 567 கோடி வருவாய் ஈட்ட மேற்கொள்ள வேண்டியது என்ன? என்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் பி.மூர்த்தி ஆலோசனை நடத்தினார்.
சென்னை,
சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாக கூட்டரங்கில், அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், நிர்வாக மாவட்ட பதிவாளர்கள், தணிக்கை மாவட்ட பதிவாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் (முத்திரை) மற்றும் தனி துணை ஆட்சியர்கள் (முத்திரை) ஆகியோர் பங்கேற்ற பணி சீராய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை தாங்கினார்.
கூட்டத்தின்போது, கடந்த 2022-23 நிதி ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் ரூ.17,296.84 கோடி வருவாய் வசூல் செய்ததற்காக பதிவுத்துறை அலுவலர்களை, அமைச்சர் பாராட்டினார். 2023-24 நிதி ஆண்டு பட்ஜெட்டில் பதிவுத்துறை மூலம் ரூ.25 ஆயிரத்து 567 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இந்த வருவாயை ஈட்டுவதற்கு தேவையான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அனைத்து அலுவலர்களுக்கும் அவர் அறிவுரை வழங்கினார்.
பதிவு சட்டம்
மேலும், பதிவு சட்டம் பிரிவு 77 (ஏ) கீழான விசாரணைகள், நிலுவை ஆவணங்கள், பதிவுற்ற ஆவணங்கள் அன்றே திரும்ப வழங்குதல் போன்ற இனங்கள் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார். அதேபோல் மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை), தனி துணை ஆட்சியர் (முத்திரை) ஆகியோர் இந்திய முத்திரை சட்டம் பிரிவு '47 ஏ 1' மற்றும் '47 ஏ 3'-ன் கீழ் ஆணையிடப்படவேண்டிய ஆவணங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு இறுதி ஆணைகள் பிறப்பிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் பதிவுத்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.