சனாதன தர்மம் என்றால் என்ன? சாதி, சமூக பாகுபாடுகளுக்கு ஒருபோதும் இடம் இல்லை -கவர்னர் விளக்கம்


சனாதன தர்மம் என்றால் என்ன? சாதி, சமூக பாகுபாடுகளுக்கு ஒருபோதும் இடம் இல்லை -கவர்னர் விளக்கம்
x

சனாதன தர்மம் என்றால் என்ன? என்பது குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசும்போது, ''சனாதனத்தை டெங்கு, மலேரியா கொசுக்களை போன்று ஒழிக்க வேண்டும்'' என்று பேசினார்.

இந்த கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.

சனாதனம் என்பது பொதுவெளியிலும், சமூக ஊடகங்களிலும் இப்போது பேசும் பொருளாக உருவெடுத்து இருக்கிறது. ஆனால் சனாதனம் பற்றி ஆன்மிகவாதிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் வெவ்வேறு விளக்கங்களை குறிப்பிட்டு வருகிறார்கள். இதில் எதை அதிகாரபூர்வமாக சனாதனத்துக்கு பொருளாக எடுத்துக்கொள்வது என்பது மக்களுக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.

இந்த நிலையில், சனாதன தர்மம் என்றால் என்ன? என்பது குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள கருத்துகள் விவரம் வருமாறு:-

சனாதன தர்மம்

சனாதன தர்மம் என்பது ஆன்மிகம், வாழ்க்கை மற்றும் படைப்பு தொடர்பான அனைத்தையும் உள்ளடக்கிய பார்வையாகும். இதில் படைப்பின் ஒவ்வொரு கூறுகளுமே ஆன்மிகத்தின் பல்வேறு வெளிப்பாடுகளாகும். இதனால் அவை ஒன்றோடொன்று தொடர்புடையதாகவும், இணைக்கப்பட்டதாகவும் இருக்கிறது. இத்தகைய கண்ணோட்டம், தனிமனிதன், குடும்பம், சமூகம் ஆகியவை தங்களுக்குள்ளும், சுற்றுச்சூழலுக்கும் இடையே உள்ள பரஸ்பர உறவை பிரதிபலிக்கும் வகையிலும், அவற்றை மதிக்கும் வகையிலும் இருக்கிறது.

இது அவர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டாக இணைந்து நடத்தும் ஒரு ஒத்திசைவான கலாசாரத்தின் பரிணாம வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. சனாதன தர்மத்தை பொறுத்தமட்டில் சாதி அல்லது சமூக பாகுபாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை. இத்தகைய பாகுபாடுகள் சமூக தீமைகள் மட்டுமின்றி, சனாதன தர்மத்துக்கும் எதிரானது.

வேறுபாடு இல்லை

சனாதன தர்மத்தின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட வெளிபாடு ரிக் வேதத்தின் அடிப்படை கொள்கைகளில் இருந்து வெளிக்கொணரப்பட்டது. அது வருமாறு:-

* பரமேஸ்வரர் அல்லது ஆதி பகவான் அல்லது சர்வ சக்தி உள்ள கடவுள்தான் படைப்புகளை உருவாக்கினார்.

* படைப்புகளை உருவாக்கிய பரமேஸ்வரர் படைப்பின் ஒவ்வொன்றிலும் அங்கமாக இருக்கிறார். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என உயிருள்ள மற்றும் உயிரற்றவற்றிலும் அவர் இருக்கிறார். எனவே படைப்பு முழுவதும் ஒரு குடும்பம்தான்.

* இந்த உலகளாவிய ஒருமைப்பாடு மக்களின் ஆன்மிக முயற்சிகள், வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்ப அனுபவிக்கப்படுகிறது. எனவே அவர்கள் அதை தங்கள் வழிகளில் வெளிப்படுத்தி, சம்பிரதாயங்கள் அல்லது நம்பிக்கையின் பிரிவுகள் என்று அழைக்கப்படும் பல பாதைகளை உருவாக்குகிறார்கள். எனினும் அடிப்படை கொள்கைகளில் எந்தவித வேறுபாடும் இல்லை.

பிரதிபலிப்பு

பெரு வழக்கமான உலக சமயங்களுக்கு உரியவையல்லாத சமய நம்பிக்கைகளை உடைய அல்லது சமய நம்பிக்கையற்ற என்ற கருத்து சனாதன தர்மத்துக்கு அன்னியமானது. அதற்கு ஒருபோதும் சனாதன தர்மத்தில் இடம் இல்லை. 'உலகம் ஒரு குடும்பம்' (வசுதைவ குடும்பம்) அல்லது 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' ஆகியவை சனாதனத்தின் முக்கிய பிரதிபலிப்புகளாகும். 'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் அழகான வெளிப்பாடுதான் சனாதன தர்மம்.

இவ்வாறு கவர்னர் ஆர்.என். ரவி கூறியிருக்கிறார்.


Next Story