தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல; தந்திர மாடல் ஆட்சி: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
தமிழகம் முழுவதும் அதிகளவில் காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
சேலம்,
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. காய்ச்சல் பரவலை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் அதிகளவில் காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும்.
இலவச பேருந்துகளில் பயணம் செய்யும் பெண் பயணிகளிடம் சாதி உள்ளிட்ட விவரங்களை கேட்பது பிரச்சினையை ஏற்படுத்தும்; சாதி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை பெண் பயணிகளிடம் கேட்பது ஏன்? இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
நானும் டெல்டா காரன்தான் என்று முதல்-அமைச்சர் கூறிக்கொண்டால் போதாது; டெல்டா விவசாயிகளுக்கு உரிய முறையில் தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் முழுமையான விளைச்சலை பெறவில்லை. கடன் வாங்கிதான் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்தனர்.
விவசாயிகளை திமுக அரசு ஏமாற்றியுள்ளது. திமுக ஆட்சியில் ஹெக்டேருக்கு ரூ.13,500 மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டது. மக்களுக்கு முறையான பொங்கல் தொகுப்பை வழங்க வேண்டும். தற்போது நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல; தந்திர மாடல் ஆட்சி. இவ்வாறு அவர் கூறினார்.